உலகின் மிகப்பெரிய மற்றும் பணம் அதிகமாக புழங்கக்கூடிய டி20 லீக் என்றால் அது ஐபிஎல் தான். வெறும் இரண்டரை மாதங்களில் கோடி கோடியாக சம்பாதிக்க முடியும் என்பதால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆட ஆர்வமாக உள்ளனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லில் ஆட வேண்டும் என்பதற்காக கோலி உட்பட இந்திய வீரர்களை ஸ்ளெட்ஜிங் செய்ய பயப்படுவதாக வெளிப்படையாக தடாலடியாக தெரிவித்துள்ளார் மைக்கேல் கிளார்க். 

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், ஆரோன் ஃபின்ச் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லின் நட்சத்திர விரர்களாக ஜொலிப்பதுடன், அனைத்து சீசன்களிலும் ஆடிவருகின்றனர். ஐபிஎல் 13வது சீசன் கொரோனாவால் நடக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது. ஆனால் இந்த சீசனுக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ், அதிகபட்சமாக ரூ.15.5 கோடி கொடுத்து கேகேஆர் அணியால் எடுக்கப்பட்டார்.

அதேபோல மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஹேசில்வுட்டை ரூ.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனான ஆரோன் ஃபின்ச்சை கோலி கேப்டனாக இருக்கும் ஆர்சிபி அணி ரூ.4.4 கோடிக்கு எடுத்தது. இவ்வாறு ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் அனைவருமே ஐபிஎல்லில் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போன ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தற்போது கோலி உட்பட இந்திய அணியின் சீனியர் வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய பயப்படுவதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் கிளார்க், இந்திய கிரிக்கெட் பொருளாதார ரீதியாக சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் ஐபிஎல்லின் விளைவாக எவ்வளவு வலுவாகவும் பவர்ஃபுல்லாகவும் திகழ்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியாகட்டும் அல்லது மற்ற சர்வதேச அணிகளாகட்டும்.. இந்தியாவுக்கு எதிராக ஆடும்போது, கோலி மற்றும் மற்ற இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய பயப்படுகின்றனர். ஏப்ரலில் அவர்களுடன் இணைந்து ஆட வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய பயப்படுகின்றனர். 

ஐபிஎல்லில் ஆட வேண்டும், ஆர்சிபி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காக விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்ய ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகின்றனர் என்று மைக்கேல் கிளார்க் தங்கள் சொந்த நாட்டு வீரர்களை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் இதுதான் காரணமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இந்திய அணி முன்புபோல் இல்லை.. இப்போதெல்லாம் எந்த எதிரணி எந்த மாதிரியாக வம்பிழுத்தாலும், கோலியும் சரி.. கோலியின் தலைமையிலான இந்திய அணியும் சரி.. வம்பிழுத்தவர்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுப்பதுடன், ஸ்லெட்ஜிங்கிற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அபாரமாக ஆடி வெற்றியும் பெறுகிறது இந்திய அணி. அதனால் கூட ஆஸ்திரேலிய அணி, மற்ற அணிகளை செய்வதை போல இந்திய அணியை தற்போது ஸ்லெட்ஜிங் செய்ய தயங்கக்கூடும்.