ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய 3 விதமான ஆஸி., அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தான் இருந்துவந்தார். 2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் பதவியையும் இழந்தார்.

அதன்விளைவாக, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆஸி., அணியின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும், டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர். டிம் பெய்னின் கேப்டன்சியில் 2018-2019ல் முதல் முறையாக சொந்த மண்ணில் ஆஸி., அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், இந்த முறையும் பெய்னின் கேப்டன்சியில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது ஆஸி., அணி.

இந்நிலையில், ஆஸி., டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றப்படுவது குறித்த விவாதங்கள் வலுத்துள்ள நிலையில், 3 விதமான ஆஸி., அணிகளுக்குமே பாட் கம்மின்ஸையே கேப்டனாக நியமிக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் உலக கோப்பை வின்னிங் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் கிளார்க், பாட் கம்மின்ஸ் கேப்டன்சிக்கு தயாராகிவிட்டார். அணிக்கு எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய எல்லா நேரத்திலும் தயாராக இருக்கிறார். இந்தியாவின் இரண்டாம் தர அணியால் ஆஸி., வீழ்த்தப்பட்ட டெஸ்ட் தொடரில், தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் கம்மின்ஸ். அணிக்கு தேவைப்படும்போதெல்லாம், முன்வந்து அதை செய்துகொடுக்கக்கூடிய கம்மின்ஸின் கேரக்டர் அபாரம். 

டிம் பெய்னின் டைம் முடிந்துவிட்டது என்றால், சில இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளித்து, ஸ்மித், வார்னர், ஹேசில்வுட், நேதன் லயன் ஆகிய அனுபவ வீரர்களின் உதவியுடன் அணியை வழிநடத்தும் கேப்டன்சி பொறுப்பு கம்மின்ஸிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆஸி., அணியின் கேப்டன் கண்டிப்பாக கம்மின்ஸ் தான். 3 விதமான அணிகளுக்குமே கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.