உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிப்பது ரோஹித், விராட் கோலி மற்றும் பும்ரா தான். இவர்கள் மூவரையும் தான் இந்திய அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. 

உலக கோப்பைக்கு முன்னர் இந்திய அணியில் இருந்துவந்த மிடில் ஆர்டர் சிக்கல் உலக கோப்பையிலும் தொடர்கிறது. மிடில் ஆர்டரில் மந்தமாக ஆடுவதுபோல் தெரிந்தாலும் தோனி ஒருவர் மட்டுமே நம்பிக்கையளிக்கிறார். அவர் மட்டுமே பொறுப்புடன் கடைசி வரை ஆடி முடிந்தவரை ரன்களை உயர்த்தி கொடுக்கிறார். 

ஆனால் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி - கேதர் ஜோடியின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 

அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் தோனி மந்தமாகவே ஆடினார். 338 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 45 ஓவரில் 267 ரன்கள் அடித்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் தோனியும் கேதரும் இணைந்து வெறும் 39 ரன்கள் மட்டுமே அடித்தனர். இங்கிலாந்து பவுலர்கள் ஸ்லோ டெலிவரிகளாக வீசி நெருக்கடி கொடுத்தனர். ஆடுகளமும் மந்தமாகிவிட்டதால் அந்த நேரத்தில் அடித்து ஆடுவது கடினம் தான் என்றாலும் பெரிய ஷாட்டுக்கு தோனியும் கேதரும் முயற்சிக்கவே இல்லை என்பது விமர்சனத்துக்கு உள்ளானது. 

இவ்வாறு மந்தமான பேட்டிங்கிற்காக தோனி தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், தோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியுள்ளார். தோனி குறித்து பேசியுள்ள கிளார்க், தோனியை மக்கள் சந்தேகிக்கக்கூடாது. சிறந்த வீரர்களை எப்போதுமே சந்தேகிக்கக்கூடாது. தோனி சிறந்த வீரர் என்பதால் அவரது திறமையின் மீது எந்த சூழலிலும் சந்தேகம் கொள்ளக்கூடாது. தோனி இந்திய அணிக்கு மிக மிக அவசியம். எனவே அவர் அணிக்கு தேவைப்படும் வரை அவரை பாதுகாத்து வைக்க வேண்டும். அரையிறுதியிலோ இறுதி போட்டியிலோ முக்கியமான சூழலில் தோனி அடித்துவிடுவார் என்று கிளார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.