ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான கேப்டன் ரிக்கி பாண்டிங். அந்த அணிக்கு கேப்டனாக இருந்து தொடர்ச்சியாக 2 உலக கோப்பைகளை வென்று கொடுத்த ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் உலக கோப்பைகளை வென்றபோது அந்த மூன்று உலக கோப்பை அணியிலும் ஆடியவர். 

பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அந்த காலக்கட்டத்தில் எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி கிரிக்கெட் அரங்கில் கோலோச்சியது. ஆஸ்திரேலிய அணியை அசைக்க முடியாத அணியாக வைத்திருந்தவர். கிரிக்கெட் வரலாற்றில் ஆல்டைம் சிறந்த கேப்டன்களில் ஒருவர் பாண்டிங். 

தற்போது வர்ணனையாளராகவும், ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துவருகிறார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிகளில் வர்ணனை செய்துவருகிறார். 

ரிக்கி பாண்டிங் டுவிட்டரில் இல்லாமல் இருந்தது, அவருடன் ரசிகர்கள் தொடர்புகொள்ள கஷ்டமாக இருந்தது. இந்நிலையில், அண்மையில் டுவிட்டரில் புதிய கணக்கை தொடங்கிய பாண்டிங், தனது மகனுக்கு பயிற்சியளிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். 

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங்குடன் நியூசிலாந்து முன்னாள் கேப்டனும் பாண்டிங்கிற்கு நெருக்கமானவருமான பிரண்டன் மெக்கல்லமும் வர்ணனை செய்துவருகிறார். 

பாண்டிங் டுவிட்டரில் கணக்கு தொடங்கியதை அடுத்து, அவரை டேக் செய்த மெக்கல்லம், உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால், எனது எந்த மெசேஜிற்கும் நீங்கள் ரிப்ளை செய்வதே இல்லை. அதுதான் டுவிட்டரிலாவது பதிலளிப்பீர்கள் என்று இதில் மெசேஜ் செய்கிறேன். வர்ணனையாளர்களான நாம் எத்தனை மணிக்கு மைதானத்திலிருந்து கிளம்புவது கேப்டன்? என்று பதிவிட்டிருந்தார். 

மெக்கல்லமின் டுவீட்டிற்கு, 10.30 மணிக்கு ப்ரோ என்று கூலாக பாண்டிங் பதிலளித்துள்ளார். 

எப்படியோ ஒருவழியாக பாண்டிங்கிடமிருந்து ரிப்ளையை பெற்றுவிட்டார் மெக்கல்லம்.