வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. 

டிசம்பர் 15, 18, 22 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் கட்டாக் ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

சையத் முஷ்டாக் அலி தொடரில் டெல்லி அணிக்கு ஆடிய தவானுக்கு, மகாராஷ்டிராவிற்கு எதிரான போட்டியில் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமடையாததால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அவர், அதிலிருந்து விலகினார். 

இந்நிலையில், ஒருநாள் தொடர் வரும் 15ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஷிகர் தவானுக்கு காயம் குணமடையாததால் ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். எனவே அவருக்கு மாற்று வீரராக மயன்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஷிகர் தவான் அண்மைக்காலமாக மந்தமாக ஆடிவருவதால், டி20 அணியில் அவருக்கு பதிலாக ராகுலையும் ஒருநாள் அணியில் அவருக்கு பதிலாக மயன்க் அகர்வாலையும் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் ஏற்கனவே எழுந்தன. இந்நிலையில், தவான் காயத்தால் வெளியேறியதால் மயன்க் அகர்வால் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஏற்கனவே டெஸ்ட் அணியில் இடம்பெற்று அபாரமாக ஆடி தனது இடத்தை உறுதி செய்துவிட்ட மயன்க் அகர்வால், ஒருநாள் போட்டிகளீலும் தனது திறமையை நிரூபித்து தனக்கான இடத்தை உறுதி செய்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அந்தளவிற்கு அவர் திறமையான வீரர் என்பதை தொடர்ச்சியாக நிரூபித்துவந்துள்ளார். 

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), மயன்க் அகர்வால், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஷமி.