இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச்சும் வார்னரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். ஃபின்ச் 36 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதமடித்து அசத்தினார். வார்னரை விட அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல், வெறும் 28 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். வார்னர், ஃபின்ச், மேக்ஸ்வெல்லின் அதிரடியால் அந்த அணி 233 ரன்களை குவித்தது. 

234 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

இந்த போட்டியில் காட்டடி அடித்தார் மேக்ஸ்வெல். 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசினார். இந்த 3 சிக்ஸர்களில் ஒன்று தோனியின் ஹெலிகாப்டர் ஷாட். தோனியின் வருகைக்கு முன் யார்க்கர்களை சிக்ஸர் விளாசுவது மிக அரிதாக நடந்த சம்பவம். ஆனால் தோனி, யார்க்கர் பந்துகளை தனது பாணியில் ஒரு ஷாட்டை ஆடி சிக்ஸர் விளாசினார். அதுதான் ஹெலிகாப்டர் ஷாட். தோனி ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க தொடங்கிய பின்னர், சர்வதேச அளவில் மற்ற வீரர்களும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்துவருகின்றனர். 

இந்த போட்டியில் மேக்ஸ்வெல் அடித்த ஹெலிகாப்டர் ஷாட், தோனியை கண்முன் நிறுத்தியது. ரஜிதா வீசிய 18வது ஓவரின் கடைசி பந்து ஃபுல் லெந்த்தில் வீசப்பட்ட பந்து. அதை ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் சிக்ஸருக்கு அனுப்பினார் மேக்ஸ்வெல். தோனியை நினைவுபடுத்திய மேக்ஸ்வெல்லின் அந்த ஹெலிகாப்டர் ஷாட் வீடியோ இதோ..(இந்த வீடியோவில் உள்ள இரண்டாவது ஷாட்)