உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் முடிவடைகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், நான்காவது அணியாக நியூசிலாந்து நுழைவது உறுதியாகிவிட்டது.

நாக் அவுட் சுற்று தொடங்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு மரண அடி விழுந்திருக்க வேண்டியது. நல்ல வேளையாக அது நடக்காமல் போனது. ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் ஆடுகிறது. 

இந்நிலையில், வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஷான் மார்ஷுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹேண்ட்ஸ்கம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷான் மார்ஷுக்கு அடிபட்ட சமயத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஃபினிஷரும் அதிரடியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான மேக்ஸ்வெல்லுக்கும் கையில் அடிபட்டது. 

மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் மேக்ஸ்வெல்லுக்கு கையில் அடிபட்டது. பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது எலும்புமுறிவோ அல்லது பெரியளவிலான காயமோ இல்லாததால் மேக்ஸ்வெல் தப்பினார். ஷான் மார்ஷுக்கும் அடிபட்ட நிலையில், மேக்ஸ்வெல்லுக்கும் பெரிய காயமாக இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணியின் நிலை பரிதாபமாகியிருக்கும். ஏனெனில் அதிரடியான பேட்டிங், பார்ட் டைம் பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பு செய்யக்கூடியவர் மேக்ஸ்வெல்.