டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே ஆடப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக டி20 போட்டிகள் ஆடப்படுகின்றன. அம்பயரின் முடிவை ரிவியூ செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. 100 பந்து போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாட்களாக குறைப்பது வரை பல மாற்றங்களுக்கான விவாதங்கள் நடத்தப்பட்டு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன. 

எனவே அந்த வகையில், டி20 கிரிக்கெட்டிலாவது, லெக் பை ரன் முறையை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் கருத்து தெரிவித்துள்ளார். 

பிக்பேஷ் லீக் தொடரில் வர்ணனை செய்துவரும் மார்க் வாஹ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வர்ணனை செய்தபோது இதை தெரிவித்தார். மார்க் வாஹின் கருத்தையும் அதற்கு சக வர்ணனையாளரான மைக்கேல் வான் கூறிய பதில் கருத்தையும் என அந்த மொத்த விவாதத்தையும் பார்ப்போம். 

மார்க் வாஹ்: அனைத்து விதமான போட்டிகளிலும் விதிகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் சிலவற்றை தயார் செய்து வைத்துள்ளேன். அந்தவகையில், லெக் பைஸிற்கு ரன் கொடுக்கக்கூடாது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டி.. பேட்டில் அடிக்காத பந்திற்கு, எதற்காக ரன் கொடுக்க வேண்டும்? 

மைக்கேல் வான்: அது ஆட்டத்தின் ஒரு அங்கம்.. 

மார்க் வாஹ்: அது ஆட்டத்தின் அங்கம் தான் என்பது எனக்கும் தெரியும். ஆனால் பேட்டில் அடிக்காத பந்திற்கு எதற்கு ரன்..? ஆட்டத்தின் சிறப்பை மேம்படுத்துவதற்காக, நாம் ஏன் அந்த விதியை மாற்றக்கூடாது? பந்தை பேட்டால் அடிப்பதுதான் பேட்டிங்கே. அப்படியிருக்கையில், அந்த அடிப்படை ஐடியாவையே  லெக் பைஸ் விதி குலைக்கும் விதமாக உள்ளது.

மைக்கேல் வான்: நீங்கள் எம்சிசி(மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் - கிரிக்கெட் விதியை உருவாக்கும் மற்றும் மாற்றியமைக்கும் அமைப்பு) கிரிக்கெட் கமிட்டியில் உறுப்பினராக இருக்க வேண்டும். நீங்கள் அங்கிருந்தால்தான் விதியை மாற்றலாம். உங்களுடைய எண்ண முறைக்கு, நீங்கள் அங்கிருக்க வேண்டிய நபர். எம்சிசியில் மெம்பராக இருந்தால் வருடத்திற்கு இரண்டு முறை லண்டனுக்கு சென்று லார்ட்ஸில் அருமையான அறையில் ஆலோசனைக்கூட்டத்தில் பங்குபெறலாம் என்றார்.