ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரும் சீனியர் ஸ்பின்னருமான ஹர்பஜன் சிங் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். சிஎஸ்கே அணியில் கடந்த 2 சீசன்களாக முக்கியமான வீரராக ஹர்பஜன் சிங் திகழ்ந்த நிலையில், இந்த சீசனில் இருந்து முழுவதுமாக விலகியிருப்பது சிஎஸ்கேவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கேவில் பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் இருந்தாலும், அனுபவமான ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங்கின் இழப்பு ஈடுகட்ட முடியாததுதான். ஹர்பஜன் சிங் கடந்த 2 சீசன்களில், பவர்ப்ளேயில் அருமையாக வீசி, கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட எதிரணிகளின் அதிரடி வீரர்களை ஆரம்பத்திலேயே வீழ்த்தி சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில், ஹர்பஜன் சிங் இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக யாரை எடுக்கலாம் என சில முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் ஒருவரின் டுவீட்டிற்கு பதிலளித்த மனோஜ் திவாரி, தனக்கு அப்படியாவாது வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வாய்திறந்து வாய்ப்பு கேட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் விலகியதையடுத்து சிஎஸ்கேவில் அவருக்கு நிகரான வேறு ஆஃப் ஸ்பின்னரே இல்லை. கேதர் ஜாதவ் ஓரளவிற்கு வீசுவார். அவரை தவிர மற்ற ஸ்பின்னர்கள் அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு, வெளியே திரும்பும் வகையில்(லெக் ஸ்பின்னர்) வீசக்கூடியவர்களே தவிர, வலது கை பேட்ஸ்மேன்களுக்கு உள்நோக்கி வீசக்கூடிய வலது கை ஆஃப் ஸ்பின்னர் கிடையாது என்ற பதிவிற்கு, இது ஒர்க் அவுட் ஆகுமா? என்று, தான் விக்கெட் வீழ்த்திய வீடியோவை பதிவு செய்துள்ளார் மனோஜ் திவாரி.

 

மேற்கு வங்கத்தை சேர்ந்த மனோஜ் திவாரி, ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ், கேகேஆர், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளில் ஆடியுள்ளார். கேகேஆர் ஐபிஎல் கோப்பையை வென்றபோது, அந்த வின்னிங் டீமில் ஆடியவர் மனோஜ் திவாரி. கேகேஆர் அணி டைட்டிலை வெல்ல, மனோஜ் திவாரியின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. நல்ல வீரரான மனோஜ் திவாரியை, கடந்த 2 சீசன்களாக அனைத்து ஐபிஎல் அணிகளும் திட்டமிட்டு ஓரங்கட்டுகின்றன.

2018 ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடிய மனோஜ் திவாரி, 5 போட்டிகளில் ஆடி 146 ரன்கள் அடித்தார். அந்த சீசனுக்கு பிறகு அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அவரது அடிப்படை விலையில் கூட எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால், தான் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதை அறிந்த மனோஜ் திவாரி, அதுகுறித்த அதிருப்தியையும் விரக்தியையும் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார்

இந்நிலையில், பேட்ஸ்மேனான அவர், பவுலரான ஹர்பஜன் சிங்கிற்கு மாற்றாகவாவது நம்மை எடுக்கமாட்டார்களா என்று ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் கதறினாலும், அவரை எடுக்கக்கூடாது என்பதில் ஐபிஎல் அணிகள் உறுதியாக இருப்பது தெரிகிறது.