வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி தோல்வியை தழுவியது இந்திய அணி. 

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்கான அணி தயாரிப்பில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதற்காக இளம் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்படுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் கூட, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

முதல் டி20 போட்டியில் ஷிவம் துபே ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் சரியாக ஆடவில்லை. ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் அனுபவமில்லாத இளம் வீரர்களை ஆடவைத்ததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என கருதும் மனோஜ் திவாரி, தேர்வாளர்களை கிண்டல் செய்யும் விதமாக டுவீட்டும் போட்டுள்ளார். 

இந்திய அணிக்காக வெறும் 8 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் மனோஜ் திவாரி. இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காத விரக்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார் மனோஜ் திவாரி. இந்திய அணியில் தான் இடம் கிடைக்கவில்லை என்றால், ஐபிஎல்லிலும் கடந்த சீசனில் ஓரங்கட்டப்பட்டார் மனோஜ் திவாரி. இந்நிலையில், கடும் விரக்தியில் இருக்கும் அவர், தேர்வாளர்களை டுவிட்டரில் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பதிவிட்டுள்ள டுவீட்டில், வங்கதேசத்திற்கு எதிரான தோல்வி, அதிர்ச்சிகரமான முடிவு. கிரிக்கெட்டில் இதெல்லாம் நடப்பதுதான் . ஆனால் சில ஏரியாக்களில் இந்திய அணி இன்னும் மேம்பட வேண்டும். அனுபவத்தை மார்க்கெட்டில் வாங்க முடியும் என்று நம்புகிறவர்களின் கண்களை இந்த போட்டி திறந்திருக்கும் என்று தேர்வாளர்களை விமர்சிக்கும் வகையில் டுவீட் செய்துள்ளார்.