கர்நாடகா மற்றும் செர்வீஸஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே, அபாரமாக ஆடி சதமடித்தார். மனீஷ் பாண்டே மற்றும் தேவ்தத் படிக்கல்லின் அதிரடியால் கர்நாடக அணி 20 ஓவரில் 250 ரன்களை குவித்தது. 

கர்நாடக அணியின் தொடக்க வீரர்களாக ரோஹன் கடமும் தேவ்தத் படிக்கல்லும் இறங்கினர். முதல் ஓவரிலேயே ரோஹன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தேவ்தத் படிக்கல்லுடன் கேப்டன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். 

மனீஷ் பாண்டேவும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 167 ரன்களை குவித்தனர். 43 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் படிக்கல்.

அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த மனீஷ் பாண்டே சதமடித்தார். படிக்கல் விக்கெட்டுக்கு பின்னர் களத்திற்கு வந்த கிருஷ்ணப்பா கௌதம் 15 பந்துகளில் 23 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்த மனீஷ் பாண்டே, 129 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

மனீஷ் பாண்டேவின் அதிரடியால் கர்நாடக அணி 20 ஓவரில் 250 ரன்களை குவித்தது. மனீஷ் பாண்டே 129 ரன்களை குவித்ததன் மூலம் டி20(சர்வதேச போட்டிகள், ஐபிஎல், முஷ்டாக் அலி ஆகிய அனைத்தையும் சேர்த்து) கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை மனீஷ் பாண்டே படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலியில் ஷ்ரேயாஸ் ஐயர் சிக்கிம் அணிக்கு எதிராக அடித்த 147 ரன்கள்தான் டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர். அதற்கடுத்த இடத்தை ரிதிமான் சஹாவுடன் பகிர்ந்துள்ளார் மனீஷ் பாண்டே.