உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 24ம் தேதி(நாளை) தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி வரை நடக்கவுள்ளது. 
 
உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரேவில், தமிழ்நாடு, மும்பை, டெல்லி, கர்நாடகா, ஹைதராபாத், ஆந்திரா, குஜராத், சவுராஷ்டிரா, பெங்கால், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, ஜம்மு காஷ்மீர், பரோடா, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், மேகாலயா, விதர்பா ஆகிய அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன.

இந்த தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் பஞ்சாப் அணியின் கேப்டனாக மந்தீப் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு அணியை தினேஷ் கார்த்திக் வழிநடத்தி செல்லவுள்ளார். கேரள அணியின் கேப்டனாக கர்நாடகாவை சேர்ந்த மூத்த வீரரான ராபின் உத்தப்பாவும் துணை கேப்டனாக சஞ்சு சாம்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். பரோடா அணியின் கேப்டனாக க்ருணல் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், விஜய் ஹசாரே தொடருக்கான கர்நாடக அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. கர்நாடக அணியின் கேப்டனாக மனீஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி உள்ளிட்ட பல உள்நாட்டு தொடர்களில் கர்நாடக அணியின் கேப்டனாக ஏற்கனவே செயல்பட்டுள்ள மனீஷ் பாண்டே, இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய மனீஷ் பாண்டேவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. 

கேஎல் ராகுல் கர்நாடக அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சொதப்பிவரும் ராகுல், டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்துள்ளார். எனவே மீண்டும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற விஜய் ஹசாரே தொடர் ராகுலுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. 

கர்நாடக அணியில் கிருஷ்ணப்பா கௌதம், ஷ்ரேயாஸ் கோபால், பிரசித் கிருஷ்ணா ஆகிய ஐபிஎல் நாயகர்களும் உள்ளனர். 

கர்நாடக அணி:

மனீஷ் பாண்டே(கேப்டன்), கேஎல் ராகுல்(துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், கேவி சித்தார்த், பிரவீன் துபே, பவன் தேஷ்பாண்டே, அபிஷேக் ரெட்டி, கிருஷ்ணப்பா கௌதம், ஜெகதீஷ் சுசித், அபிமன்யூ மிதுன், பிரசித் கிருஷ்ணா, ரோனித் மோர், ஷரத் ஸ்ரீனிவாஸ்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் கோபால், வி கௌசிக்.