உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருவதால் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆடிவருகின்றனர். 

ரோஹித் சர்மா தலைமையிலான 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனிலும் சிறப்பாக ஆடிவருகிறது. ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான மலிங்காவின் வழக்கமான வெரைட்டியான பந்துகளால், ரன்களை குவிக்க முடியாமல் ஆர்சிபி வீரர்கள் திணறினர். டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தும் கூட பெரிய ஸ்கோரை அடிக்கவிடாமல் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் உட்பட மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆர்சிபி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அவர்களின் விக்கெட்டுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி, மிடில் ஓவர்களில் சற்று மந்தமாக ஆடினாலும், ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 19வது ஓவரிலேயே போட்டியை முடித்துவைத்தார். 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

வான்கடே மைதானத்தில் பந்து நன்றாக சுழன்றதால் மிடில் ஓவர்களில் ஆர்சிபி ஸ்பின்னர்கள் மும்பை அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர். ஆனாலும் நேகி வீசிய 19வது ஓவரை அடித்து நொறுக்கிய ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரிலேயே மும்பை அணியை வெற்றி பெற செய்தார். ஹர்திக் பாண்டியா, உலக கோப்பைக்கு முன்னதாக சிறப்பாக ஆடி ஃபினிஷிங் வேலையை வெற்றிகரமாக செய்துவருவது நல்ல விஷயம். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியிலும் அபாரமாக ஆடியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுடன் மும்பை அணியில் ஆடும் இலங்கை ஃபாஸ்ட் பவுலர் மலிங்கா, ஹர்திக்கிற்கு உலக கோப்பையில் வீசுவதற்கு தனக்கு பயமாக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா அபாரமாக ஆடிவரும் நிலையில், இப்படியொரு கருத்தை மலிங்கா தெரிவித்துள்ளார். டெத் ஓவர்களில் பல வேரியேஷன்களில் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டு ரன்களை கட்டுப்படுத்தும் மலிங்காவே, ஹர்திக்கிற்கு வீச பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.