உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று நடந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் அடிக்கப்பட்டது. 2வது விக்கெட்டை 144 ரன்களில் இழந்த இலங்கை அணி, அடுத்த 2 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. 

பின்னர் மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடர்ந்து நடந்தது. இலங்கை அணி 37வது ஓவரில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டக்வொர்த் லிவைஸ் முறைப்படி, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 41 ஓவரில் 187 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணி 33வது ஓவரில் 152 ரன்களுக்கே ஆல் அவுட்டானதை அடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது. 

இந்த போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது. பிரதீப் 4 விக்கெட்டுகளையும், அனுபவ பவுலர் மலிங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மலிங்கா இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளார். 

மலிங்கா ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வீழ்த்திய 3 விக்கெட்டுகளுடன் சேர்த்து உலக கோப்பையில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் தலா 44 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாம் மற்றும் ஆறாம் வரிசையில் இருந்த ஜாகீர் கான் மற்றும் ஸ்ரீநாத்தை பின்னுக்குத்தள்ளி 5ம் இடத்தை பிடித்துள்ளார் மலிங்கா. ஜாகீர் கான் ஐந்தாமிடத்திலும் ஸ்ரீநாத் ஆறாமிடத்திலும் இருந்தனர். தற்போது மலிங்கா, 46 விக்கெட்டுகளுடன் ஐந்தாமிடத்தில் உள்ளார். 

இந்த பட்டியலில் 71 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் முதலிடத்திலும், உலக கோப்பையில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முத்தையா முரளிதரன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வாசிம் அக்ரம் மூன்றாமிடத்திலும் 49 விக்கெட்டுகளுடன் சமிந்தா வாஸ் நான்காமிடத்திலும் உள்ளனர். மலிங்க இன்னும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வாஸை பின்னுக்குத்தள்ளி நான்காமிடத்தை பிடித்துவிடுவார்.