IPL 2023: பிரெரக் பொறுப்பான அரைசதம்.. பூரன் சிக்ஸர் மழை..! SRH-ஐ வீழ்த்தி 4ம் இடத்திற்கு முன்னேறியது LSG
சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 183 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரின் 2வது பந்தில் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், இன்று பிற்பகல் ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் ஐடன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், க்ளென் ஃபிலிப்ஸ், அப்துல் சமாத், டி.நடராஜன், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
குயிண்டன் டி காக், கைல் மேயர்ஸ், க்ருணல் பாண்டியா (கேப்டன்), பிரெரக் மன்கத், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், அமித் மிஷ்ரா, யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், யுத்விர் சிங், ஆவேஷ் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான அன்மோல்ப்ரீத் சிங் 27 பந்தில் 36 ரன்களும், 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதி 13 பந்தில் 20 ரன்களும் அடித்தனர். கேப்டன் ஐடன் மார்க்ரம் 20 பந்தில் 28 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய ஹென்ரிச் கிளாசன் 29 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அப்துல் சமாத் தன் பங்கிற்கு 25 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 182 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் அணி.
183 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 14 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அவர் அதிகமான பந்துகளை வீணடித்துவிட்டு சென்றார். மற்றொரு தொடக்க வீரரான குயிண்டன் டி காக்19 பந்தில் 29 ரன்கள் அடித்து வெளியேறினார்.
3ம் வரிசையில் இறங்கிய பிரெரக் மன்கத் என்ற வீரர் பொறுப்புடன் பேட்டிங் ஆடிய அதேவேளையில், அடித்தும் ஆடினார். ஆனால் மறுமுனையில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மந்தமாக ஆடியதால் ரன் வேகமெடுக்கவில்லை. 13 ஓவரில் லக்னோ அணி வெறும் 89 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 14வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து அதிரடியை தொடங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், அபிஷேக் ஷர்மா வீசிய 16வது ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் அடித்து 40 ரன்கள் அடித்திருந்த நிலையில், அந்த ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பூரன், அந்த ஓவரின் எஞ்சிய 3 பந்துகளிலும் சிக்ஸர்களை விளாச, அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் கிடைத்தது.
பிரெரக் மன்கத் அரைசதம் அடிக்க, அதன்பின்னரும் சிக்ஸர் மழை பொழிந்த பூரன் வெறும் 13 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசி கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். பிரெரக் 64 ரன்களை குவிக்க, கடைசி ஓவரின் 2வது பந்தில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பிரெரக் மன்கத் தேர்வு செய்யப்பட்டார்.