2013ம் ஆண்டிலிருந்து இந்திய அணி இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட சொந்த மண்ணில் தோற்றதில்லை. நடப்பு தென்னாப்பிரிக்க தொடர் உட்பட இந்திய அணி 2013லிருந்து தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது. 

1990களின் இறுதி மற்றும் 2000ம்களில் ஸ்டீவ் வாக் மற்றும் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியதை போல, கோலி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது. ஸ்டீவ் வாக் மற்றும் பாண்டிங் தலைமையிலான தனித்தனி ஆஸ்திரேலிய அணிகள் மட்டுமே சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தன. அந்த சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது. 

தற்போது ராஞ்சியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அசத்தலாக ஆடிவருகிறது. சொந்த மண்ணில் இந்திய அணி அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக திகழ்கிறது. இந்நிலையில், இந்தியாவில் இந்தியாவிற்கு சவாலளிக்கும் விதமாக லட்சுமணனும் ஸ்மித்தும் இணைந்து ஒரு கனவு அணியை தேர்வு செய்தனர்.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் மற்றும் வங்கதேச வீரர் தமீம் இக்பால் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளனர். டீன் எல்கர், இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்தார். மற்ற வீரர்கள் வரிசையாக அவுட்டானபோதிலும், மறுமுனையில் நிலைத்து ஆடி சதமடித்து போராடினார் எல்கர். 

அதன்பின்னர் மிடில் ஆர்டரில் மிகச்சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளனர். மூன்றாம் வரிசை வீரராக கேன் வில்லியம்சனையும் நான்காம் வரிசைக்கு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தையும் ஐந்தாம் வரிசையில் பாபர் அசாமையும் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்த வேண்டுமென்றால், எதிரணி வீரர்கள் ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்தவகையில், வில்லியம்சன், ஸ்மித், பாபர் அசாம் ஆகியோர் ஸ்பின்னை சிறப்பாக ஆடக்கூடியவர்கள். 

ஆல்ரவுண்டர்களாக ஷகிப் அல் ஹசன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளனர். விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக்கை தேர்வு செய்துள்ள லட்சுமணனும் ஸ்மித்தும், ஃபாஸ்ட் பவுலர்களாக பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரையும் ஸ்பின்னராக நாதன் லயனையும் தேர்வு செய்துள்ளனர். 

இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்த லட்சுமணனும் ஸ்மித்தும் தேர்வு செய்த கனவு அணி;

டீன் எல்கர், தமீம் இக்பால், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், பாபர் அசாம், ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், குயிண்டன் டி காக், பாட் கம்மின்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், நாதன் லயன்.