ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், சிட்னியில் கடைசி டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஜோ பர்ன்ஸ் மற்றும் வார்னர் ஆகியோர் முறையே 18 மற்றும் 45 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் வழக்கம்போலவே மிகச்சிறப்பாக ஆடினர். 

லபுஷேன் அரைசதம் அடித்து, தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், அவரை தொடர்ந்து அரைசதம் அடித்த ஸ்மித், 63 ரன்களில் ஆட்டமிழந்தார். லபுஷேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது சதத்தை பதிவு செய்தார். அதன்பின்னர் மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் களத்தில் நங்கூரமிட்டு ஆடிய லபுஷேன், தனது முதல் இரட்டை சதத்தை விளாசி அசத்தினார். 

வெகு சிறப்பாக ஆடி 215 ரன்களை குவித்த லபுஷேன், 215 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பாட்டின்சன், கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை குவித்தது. 

இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது.