இந்திய அணியின் சைனாமேன் குல்தீப் யாதவ், யாருக்கு பந்துவீசுவது மிகக்கடினம் என தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ். 2017ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான குல்தீப் யாதவ், கெரியரின் ஆரம்ப கட்டத்திலேயே, இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்தார். இவரும், இவரது ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான சாஹலும் இணைந்து 2017-2018ல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிடில் ஓவர்களில் எதிரணிகளின் பேட்டிங் ஆர்டரை சிதைத்து இந்திய அணிக்கு தொடர் வெற்றிகளை பெற்று கொடுத்தனர். 

குல்தீப் - சாஹல் ஜோடி ஜொலிக்க தொடங்கியதும், அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடி வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஆனால் 2018ல் ஆல்ரவுண்டரான ஜடேஜா மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துவிட்டார். ஆனால் அஷ்வினால் முடியவில்லை. 

அந்தளவிற்கு குல்தீப்பும் சாஹலும் இணைந்து அசத்தியதால், 2019 உலக கோப்பைக்கு அவர்கள் இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் உலக கோப்பையில் அவர்களது பருப்பு வேகவில்லை. குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி, இந்திய அணி எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்கவில்லை. அதனால் அதன்பின்னர் குல்தீப் - சாஹல் இருவரில் ஒருவரே இந்திய அணியில் எடுக்கப்படுகின்றனர். 

இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ், தனது கூக்ளிகளின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்பை கழட்டி எறிவதில் வல்லவர். இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 59 ஒருநாள் போட்டிகளில் ஆடி 109 விக்கெட்டுகளையும் 21 டி20 போட்டிகளில் ஆடி 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தீப் தாஸ் குப்தாவுடன் உரையாடிய குல்தீப் யாதவ், இதுவரை தான் பந்துவீசியதில் யார் பந்துவீச மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். 

”ஸ்மித் எனது பவுலிங்கை பேக் ஃபூட்டில் அருமையாக ஆடுவார். பந்தை நன்றாக விட்டு தாமதமாக ஆடுவார். அதனால் அவருக்கு பந்துவீசுவது மிகக்கடினம். ஒருநாள் போட்டிகளில் டிவில்லியர்ஸுக்கு வீசுவது ரொம்ப கஷ்டம். தனித்துவமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் டிவில்லியர்ஸ். அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவரை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும், அவர் பவுண்டரி அடித்துவிடுவாரோ என்று நான் பயந்ததில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்தார்.