கொரோனா அச்சுறுத்தலால் அனைத்துவிதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் பேராதாரவை பெற்ற ஐபிஎல், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, சக வீரர்களுடன் உரையாடி சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துகொள்வது என பொழுது போக்கி வருகின்றனர். சிலர் ஃபோன் வாயிலாக பேட்டிகளும் அளித்துவருகின்றனர்.

இந்திய அணியின் இடது கை லெக் ஸ்பின்னர் சைனாமேன் குல்தீப் யாதவ், ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக ஆட ஆர்வமாக உள்ளார். கடந்த சீசனில் அவரது பவுலிங் எடுபடவில்லை. அதன்பின்னர் உலக கோப்பையிலும் அவர் சோபிக்கவில்லை. அதனால் இந்திய அணியில் அவர் நிரந்தர ஸ்பின்னராக, உலக கோப்பைக்கு பின்னர் எடுக்கப்படவில்லை. 

ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக ஆடி அசத்தும் முனைப்பில் உள்ள குல்தீப் யாதவிடம், அவர் அளித்த பேட்டியொன்றில், ஐபிஎல்லில் சூப்பர் ஓவரை நீங்கள் வீசினால், எந்த 2 பேட்ஸ்மேன்கள் ஆடக்கூடாது என்று நினைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ்... அவர் ஸ்பின்னை நன்றாக ஆடக்கூடியவர். அதுமட்டுமல்லாமல் 8-9 ஆண்டுகளாக எங்கள் இருவருக்கும் நல்ல பழக்கம். அவர் ஸ்பின்னை அருமையாக ஆடக்கூடியவர் என்று எனக்கு நன்றாக தெரியும். எனவே அவர் எனது பவுலிங்கை நன்றாக ஆடுவார்.

அதேபோல ரோஹித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருமே பந்துவீசுவதற்கு மிகவும் கடினமான பேட்ஸ்மேன்கள். அதுவும் சூப்பர் ஓவரில் இவர்களுக்கு பந்துவீசுவது மிகக்கடினம் என்று குல்தீப் யாதவ் தெரிவித்தார்.

உலகின் பெஸ்ட் ஃபினிஷர் என்ற பெயர்பெற்ற தோனியையோ மிகச்சிறந்த பேட்ஸ்மேனான கோலியின் பெயரையோ குல்தீப் யாதவ் தெரிவிக்கவில்லை.