பெரிய தலைகளை தட்டி தூக்கிய கேகேஆர்.. கேப்டனையும் உறுதிப்படுத்திய கேகேஆர் அணியின் மொத்த லிஸ்ட்
ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் அதிகமான விலை கொடுத்து பாட் கம்மின்ஸை எடுத்த கேகேஆர் அணி, சில சிறந்த வீரர்களை அணியில், ஏற்கனவே இருந்த அணிக்கு வலு சேர்த்துள்ளது.
கேகேஆர் அணி தான் ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலத்தில், ஒரு வீரருக்கு அதிக விலை கொடுத்த அணி. ஆர்சிபியும் டெல்லி கேபிடள்ஸும் போட்டி போட்டுக்கொண்ட கம்மின்ஸை, கடைசியில் கேகேஆர் அணிதான் ரூ.15.5 கோடிக்கு வாங்கியது.
கேகேஆர் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் அவரும் கலந்துகொண்டார்.
பாட் கம்மின்ஸை அதிகமான தொகையான ரூ.15.5 கோடிக்கு எடுத்த கேகேஆர் அணி, இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனை ரூ.5.25 கோடிக்கு எடுத்தது. இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டனை ரூ.1 கோடிக்கும் கடந்த சீசனில், அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி, ஆனால் ஒரு சீசன் முழுவதும் ஒன்றுமே செய்யாததால் பஞ்சாப் அணியால் கழட்டிவிடப்பட்ட வருண் சக்கரவர்த்தியை ரூ.4 கோடிக்கும் கேகேஆர் அணி எடுத்தது.
தமிழ்நாடு அணியின் சிறந்த ஸ்பின்னராக திகழும், சித்தார்த் மணிமாறன் மற்றும் 48 வயதான பிரவீன் டாம்பே ஆகிய இருவரையும் அவர்களது அடிப்படை விலையான ரூ.4 கோடிக்கும் எடுத்தது கேகேஆர் அணி.
அடுத்த சீசனில் கேகேஆர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் விடுவிக்கப்பட்டு, புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனை ஏலத்தில் எடுத்ததால் அவரே கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தினேஷ் கார்த்திக் தான் கேப்டன் என்பதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டது. எனவே தினேஷ் கார்த்திக்கே அடுத்த சீசனிலும் கேப்டனாக தொடரவுள்ளார்.
நேற்று நடந்த ஏலத்தில், ராஜஸ்தான் அணியால் கழட்டிவிடப்பட்ட ராகுல் திரிபாதி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் க்ரீன் மற்றும் நிகில் ஷங்கர் நாயக் ஆகியோரையும் கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது.
கேகேஆர் அணி:
தக்கவைத்த வீரர்கள்:
தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில், சுனில் நரைன், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, லாக்கி ஃபெர்குசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி, சித்தேஷ் லத்(மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பெறப்பட்டவர்).
ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட வீரர்கள்:
பாட் கம்மின்ஸ், இயன் மோர்கன், வருண் சக்கரவர்த்தி, டாம் பாண்ட்டன், ராகுல் திரிபாதி, கிறிஸ் கிரீன், நிகில் ஷங்கர் நாயக், பிரவீன் டாம்பே, சித்தார்த் மணிமாறன்.