ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸை அதிகபட்சமாக ரூ.15 கோடியே 50 லட்சத்திற்கு கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது. 

இந்த ஏலத்தில் அதிகமான விலைக்கு ஏலம்போன 2 வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் தான். பாட் கம்மின்ஸுக்கு அடுத்து அதிகபட்ச விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் மேக்ஸ்வெல். கிறிஸ் மோரிஸ், ஷெல்டான் கோட்ரெல், நாதன் குல்ட்டர் நைல் ஆகியோர் நல்ல விலைக்கு ஏலம் போனார்கள்.

பாட் கம்மின்ஸ், இயன் மோர்கன், இங்கிலாந்தின் டாம் பாண்ட்டன், தமிழ்நாடு ஸ்பின்னர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சித்தார்த் மணிமாறன் ஆகியோரை எடுத்த கேகேஆர் அணி, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 48 வயதான பிரவீன் டாம்பேவை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது. 

பிரவீன் டாம்பே ஐபிஎல்லில் 42 வயதில் தான் அறிமுகமே ஆனார். 2013, 2014, 2015 ஆகிய மூன்று சீசன்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் 2016ல் குஜராத் லயன்ஸ் அணியிலும் 2017ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் ஆடினார். அவர் ஐபிஎல்லில் 33 போட்டிகளில் ஆடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ஐபிஎல்லில் ஆடிய அதிக வயதான வீரர் இவர் தான். 46 வயது வரை ஐபிஎல்லில் ஆடிய அவர், தனது 48வது வயதில் மீண்டும் ஐபிஎல் அணியில் இணைகிறார். இவர் ஆடும் லெவனில் இடம்பெறுவதும் இடம்பெறாததும் அடுத்த விஷயம். ஆனால் 48 வயதான இவர் மீது நம்பிக்கை வைத்து கேகேஆர் அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. கேகேஆர் அணியின் இந்த அதிரடி முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, பாராட்டையும் பெற்றது.