ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளில் கேகேஆர் அணியும் ஒன்று. இந்த பெருமையை அந்த அணி பெறுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒருவர் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர். 2011ம் ஆண்டு கம்பீரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர் அணி. பின்னர் அந்த அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற கம்பீர், 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களில் கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

2017ம் ஆண்டுவரை கேகேஆர் அணியில் ஆடிய, 2018ல் டெல்லி கேபிடள்ஸ் அணியில் இணைந்தார். அந்த சீசனிலேயே ஐபிஎல்லில் இருந்து விலகியும் விட்டார். தோனி, ரோஹித் சர்மா வரிசையில் கம்பீரும் மிகச்சிறந்த கேப்டன் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமோ ஐயமோ இல்லை.

கம்பீர் ஆக்ரோஷமான கேப்டன். அவர் களத்தில் ஆக்ரோஷமாக இருப்பார். அதைக்கண்டு, அதுதான் அவரது உண்மை முகம் என்றும் நினைத்தவர்களுக்கு, கம்பீரின் கேப்டன்சி திறன், அவரது நிதானம், பொறுமை, அவரது அணுகுமுறை குறித்த, பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திராத தகவல்களை அவருடன் நெருங்கி பழகிய கேகேஆர் அணியின் சி.இ.ஓ வெங்கி மைசூர் பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள வெங்கி மைசூர், 2011ல் கம்பீரை கேகேஆர் அணியில் ஒப்பந்தம் செய்தபிறகு, அவருடன் நெருங்கி பழகியதால், அவரைப்பற்றி நன்றாக தெரிந்துகொண்டேன். அவர் கேகேஆர் அணியில் எடுக்கப்பட்டது பெரிய சர்ப்ரைஸாக இருந்ததாக தெரிவித்தார். அதன்பின்னர் அவருடன் பழகப்பழக, எனக்கும் அவருக்கும் இடையேயான உறவு வலுத்தது.

அந்த நேரத்தில் கேகேஆர் அணியின் தேவையை பூர்த்தி செய்த ஒரு வீரர் என்றால் அது கம்பீர் தான். மிகச்சிறந்த மூளைக்காரர், ரொம்ப ஸ்மார்ட், அபாரமான கிரிக்கெட் உள்ளுணர்வுகளை கொண்ட டெரிஃபிக்கான கேப்டன் கம்பீர். அவரது கேப்டன்சி திறனை களத்தில் பார்த்திருக்கிறோம். நான் கம்பீருடன் அமர்ந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது, காஃபி குடிப்பது, விமானத்தில் அருகருகே அமர்வது என பல வகைகளில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவருடன் உரையாடுவேன். கம்பீர் மிகப்பெரிய உரையாற்றும் வகையிலான கேப்டன் அல்ல. நிறைய பேசவே மாட்டார் கம்பீர். அதிக சத்தமும் போடமாட்டார். மிகக்குறைவாகவே பேசும் கேப்டன் கம்பீர். ஆனால் வீரர்களிடமிருந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்து அசத்திவிடுவார். அவருடனான நினைவுகள் மிகச்சிறந்தவை. அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் எனக்கு நல்ல உறவு உள்ளது என்று வெங்கி மைசூர் தெரிவித்தார்.