ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனிலாவது முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி, முதல் 6 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. 

7வது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி, 8வது போட்டியில் தோற்றது. 9வது போட்டியில் கேகேஆர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி அதிரடி சதம் மற்றும் மொயின் அலியின் அதிரடியான அரைசதம் ஆகியவற்றால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 213 ரன்களை குவித்தது. 

214 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் லின் - நரைன் ஏமாற்றியதை அடுத்து கில் மற்றும் உத்தப்பாவும் சரியாக ஆடவில்லை. ஆனால் ரசலும் ராணாவும் இணைந்து கடைசி வரை போராடினர். கடைசி 6 ஓவர்களில் கேகேஆர் அணியின் வெற்றிக்கு 113 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராணாவும் ரசலும் இணைந்து 102 ரன்களை குவித்தனர். இதையடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 

களத்தில் பொதுவாக கோலி கோபமாகவோ ஆக்ரோஷமாகவோ இருந்துதான் ரசிகர்கள் அதிகம் பார்த்திருப்பார்கள். எப்போதாவதுதான் செம ஜாலியாக சில சம்பவங்களை செய்வார். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் அப்படியான ஒரு சம்பவம் செய்தார். 

நடப்பு ஐபிஎல் சீசனில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பிய சம்பவம் என்றால், அது அஷ்வின் செய்த மன்கேடிங் ரன் அவுட் தான். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் அஷ்வின், பட்லரை மன்கேடிங் முறையில் ரன் அவுட் செய்தார். அது பெரும் விவாதக்களமானது. அஷ்வினுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில், கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங்கின்போது, 18வது ஓவரை நரைன் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை வீசவந்த நரைன், வீசாமல் நிறுத்திவிட்டு திரும்பினார். உடனே எதிர்முனையில் இருந்த கோலி, பேட்டை கிரீஸுக்குள் வைத்து, நான் கிரீஸுக்குள் தான்ப்பா இருக்கிறேன் என்கிற ரீதியாக கிண்டலாக செய்கை செய்தார். நரைன் மன்கேடிங் ரன் அவுட் செய்வதற்காகத்தான் பந்துவீசாமல் திரும்பினார் என்று சிரித்தபடியே செய்கையில் யாரோ ஒரு வீரரிடம் தெரிவித்தார். கோலியின் இந்த ஜாலியான செயல், சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.