உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ராகுலும் நிதானமாக தொடங்கினர். ஆறாவது ஓவரில் அதிரடியை ஆரம்பித்த ரோஹித் சர்மா, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் தனது டிரேட்மார்க் ஷாட்டான புல் ஷாட்டின் மூலம் ஒரு சிக்ஸர் விளாசினார்.  ரோஹித் சர்மாவின் தன்னம்பிக்கையான ஷாட், ரசிகர்களுக்கும் நம்பிக்கையளிக்க, ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து கோலியும் ராகுலும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வேளையில், 48 ரன்கள் அடித்த ராகுலை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர். இதையடுத்து 21வது ஓவரில் விஜய் சங்கர் களத்திற்கு வந்தார். கடந்த போட்டியில் நான்காவது வரிசையில் இறங்கி சரியாக ஆடாத விஜய் சங்கருக்கு மீண்டும் ஒருமுறை, அணியில் தனது இருப்பை நியாயம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறையும் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அவரை தொடர்ந்து கேதர் ஜாதவும் வெறும் 7 ரன்களில் வெளியேறினார்.

இந்திய அணி 29 ஓவரில் 140 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் கோலியும் தோனியும் கடைசி வரை ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அரைசதம் அடித்து ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி, 72 ரன்களில் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார். ஹோல்டர் வீசிய 39வது ஓவரின் இரண்டாவது பந்து, கோலி எதிர்பார்த்த உயரத்தை விட குறைவாக வந்ததால் கோலி அரைமனதாக ஒரு ஷாட் ஆடி கேட்ச் கொடுத்தார். பொதுவாக அரைசதம் அடித்துவிட்டால் அதை சதமாக மாற்றுவதில் வல்லவரான கோலி, இந்த உலக கோப்பையில் 4 அரைசதம் அடித்த கோலியால் ஒன்றைக்கூட சதமாக மாற்றமுடியவில்லை. 

இந்த போட்டியில் கடைசிவரை நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 72 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். தோனியும் ஹர்திக் பாண்டியாவும் ஆடிவருகின்றனர். ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களில் அடித்து ஆடினால் மட்டுமே இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டமுடியும். 42வது ஓவரில்தான் இந்திய அணி 200 ரன்களையே எட்டியது.