ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பும்ரா செய்த தரமான சம்பவம், மைதானத்தையே சிரிப்பலைக்கு ஆளாக்கியது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் 259 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 193 ரன்களை குவித்தனர். 32 ஓவர்களிலேயே 200 ரன்களை எட்டிவிட்டது இந்திய அணி. ஆனால் அதன்பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணியால் இமாலய இலக்கை எட்டமுடியவில்லை. ரோஹித்தும் தவானும் அமைத்து கொடுத்த அடித்தளத்திற்கு, 400 ரன்களை எட்டியிருக்கலாம் அல்லது 400 ரன்களை நெருங்கியிருக்கலாம். ஆனால் கோலி, ராகுல், கேதர் ஆகியோர் சொதப்பினர். ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஓரளவிற்கு ஆடி ரன்களை சேர்த்தனர். எனினும் 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது இந்திய அணி. 

359 ரன்கள் என்ற கடின இலக்கை, கவாஜா, ஹேண்ட்ஸ்கம்ப், டர்னர் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 48வது ஓவரிலேயே எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது டெத் ஓவர்களில் பேட்ஸ்மேன்களே கூட கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்ஸனின் பவுலிங்கை அடிக்க முடியாமல் திணறினர். ஆனால் கடைசி பேட்ஸ்மேனான பும்ரா, இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்துவைத்தார். கடைசி பந்தில் களத்திற்கு வந்த பும்ரா, அந்த பந்தில் சிக்ஸர் விளாசினார். பும்ரா சிக்ஸர் அடித்ததை கண்டு பெவிலியனில் இருந்த கேப்டன் கோலி குதித்து குதித்து கைதட்டி சிரித்தார். மற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர் உட்பட அனைவருமே சிரித்தனர். வீரர்கள் மட்டுமல்லாது மைதானத்தில் இருந்த ரசிகர்களும் பயங்கர மகிழ்ச்சியில் சிரித்தனர். இவ்வளவு ஏன்.. பும்ராவே சிரித்தார். அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகிவருகிறது. 

இமாலய ஸ்கோரை இந்திய அணி எட்டியிருக்க வேண்டிய நிலையில், டெத் ஓவர்களில் சரியாக ஆடாததால் ஸ்கோர் குறைந்தது. அப்படியான சூழலில், பும்ரா சிக்ஸர் அடித்து முடித்துவைத்தது அணிக்கு பெரு மகிழ்ச்சிதான்.