சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார். 

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகிறார். அந்த வரிசையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 77 ரன்களை குவித்த கோலி, 222 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை கடந்து அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 

இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அடுத்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் ரோஹித் சர்மா 5வது ஓவரிலேயே அவுட்டாகிவிட்டதால் கோலி விரைவில் கிரீஸுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. கோலி நன்றாகவும் ஆடிவருகிறார். எனவே இந்த போட்டியில் 104 ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில்(ஒருநாள், டெஸ்ட், டி20) விரைவில் 20 ஆயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைப்பார். 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகிய இருவரும் 453 போட்டிகளில் 20 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினர். இந்த போட்டியில் 104 ரன்கள் அடித்தால் கோலி, இவர்களின் சாதனையை முறியடித்துவிடுவார். இந்த போட்டியில் முடியவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்த போட்டிகளில் அடித்தாலும் கூட சச்சின், லாராவின் சாதனையை கோலி முறியடித்துவிடுவார்.