India vs England 3rd Test: தீவிர பேட்டிங் பயிற்சியில் இறங்கிய கேஎல் ராகுல் – வைரலாகும் வீடியோ!
இந்திய அணியின் கேஎல் ராகுல் பேட்டிங் பயிற்சியை தொடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்று சமன் செய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் 15 ஆம் தேதி ராஜ்கோட்டை நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதில், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் உடல் தகுதியைப் பொறுத்து அணியில் இடம் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ராகுலுக்கு காலில் ஏற்பட்ட வலி காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை. ஏற்கனவே விராட் கோலியும் கிடையாது. ஷ்ரேயாஸ் ஐயரும் முதுகு வலி காரணமாக இடம் பெறவில்லை.
மேலும், ரஜத் படிதார் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். துருவ் ஜூரெலும் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த கேஎல் ராகுல் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். இது குறித்த வீடியோவை கேஎல் ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக ராஜ்கோட் நடைபெறும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் சொந்த மண்ணில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் ஒரு சதம், 9 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 1031 ரன்கள் குவித்துள்ளார். எனினும் கேஎல் ராகுல் உடல் தகுதியை எட்டினால் மட்டுமே 3ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.