இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி  கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் இந்தியாவிற்கு திரும்புகிறார். அதனால் எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடமாட்டார். முதலில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பெறாத ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ரோஹித் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெறவில்லை.

டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா காயம் காரணமாக கண்காணிக்கப்பட்டுவருகிறார். அவர் அணியில் இருப்பது குறித்த இறுதி முடிவு இனிமேல் தான் எடுக்கப்படும். ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு மையத்தில் தயாராகிவருகிறார்.

இந்திய டி20 அணியில் இடம்பெற்றிருந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். 

டி20 அணியில் மட்டும் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.