கிரிக்கெட்டில் நெருக்கடியான நிலையில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்றாலோ அரை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றாலோ வெற்றி பறிபோய்விடும். அப்படியொரு தைரியமான முடிவை நம்பிக்கையுடன் எடுத்ததால் தான் இங்கிலாந்தை இலங்கை அணி வீழ்த்தியது. அப்படியொரு முடிவை எடுக்காததால் தான் நியூசிலாந்திடம் தோற்றது தென்னாப்பிரிக்கா. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்படும் இங்கிலாந்து அணியை, இந்த தொடரில் இதுவரை சரியாக ஆடாத இலங்கை அணி வீழ்த்திவிட்டது. அதுவும் வெறும் 233 ரன்கள் என்ற இலக்கை எட்டவிடாமல் இங்கிலாந்தை சுருட்டி வெற்றி கண்டது இலங்கை அணி. 

மேத்யூஸின் பொறுப்பான பேட்டிங்கால் 232 ரன்களை அடித்த இலங்கை அணி, 233 ரன்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 233 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியை தனது அனுபவ பவுலிங்கால் தெறிக்கவிட்டார் மலிங்கா. பேர்ஸ்டோவை முதல் பந்திலேயே வீழ்த்திய மலிங்கா, வின்ஸை 14 ரன்களில் வீழ்த்தினார். மோர்கன் 21 ரன்களில் ஆட்டமிழக்க, ரூட்டும் ஸ்டோக்ஸும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றபோது, அரைசதம் அடித்திருந்த ரூட்டை 57 ரன்களில் மலிங்கா வீழ்த்தினார்.

அதன்பின்னர் தான் இலங்கை அணி ஆட்டத்துக்குள் வந்தது. ரூட்டின் விக்கெட்டுக்கு பிறகு பட்லர், மொயின் அலி, வோக்ஸ், அடில் ரஷீத் என இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு உள்ளாகி இறுதியில் தோல்வியையும் தழுவியது இங்கிலாந்து அணி. 

ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது ரூட்டின் விக்கெட்டுதான். அனுபவம் வாய்ந்த தலைசிறந்த வீரரான ரூட் களத்தில் நின்றிருந்தால் கண்டிப்பாக இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்திருப்பார். அவரது விக்கெட், இலங்கை அணிக்கு ரிவியூவால் கிடைத்தது. மலிங்கா வீசிய 31வது ஓவரில் லெக் திசையில் வீசப்பட்ட பந்தை பின் பக்கம் அடிக்க முயன்றார் ரூட். அது பேட்டை உரசிச்செல்ல, விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தார். அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் இலங்கை அணிக்கு ஒரு விக்கெட் தேவை. அதுவும் ரூட்டின் விக்கெட்டுக்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிடக்கூடாது என்பதால், சந்தேகம் இருந்தாலும் கூட நம்பிக்கையுடன் ரிவியூவை எடுத்தார் இலங்கை கேப்டன் கருணரத்னே.

அதற்கு நல்ல பலன் கிடைத்தது. பந்து பேட்டில் உரசிச்சென்றது ரிப்ளேவில் உறுதியானதால் ரூட் ஆட்டமிழந்தார். இலங்கை கேப்டன் கருணரத்னே அந்த ரிவியூவை எடுக்காமல் விட்டிருந்தால் போட்டியின் முடிவு கண்டிப்பாக மாறியிருக்கும். ஆனால் அதற்கு கருணரத்னே இடமளிக்கவில்லை. இந்த போட்டியில் கருணரத்னே எடுத்த முடிவை, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ் எடுக்காததால்தான் தென்னாப்பிரிக்க அணி தோற்றது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 242 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியில் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய வில்லியம்சன், கடைசிவரை களத்தில் நின்று நியூசிலாந்தை வெற்றி பெற செய்தார். வில்லியம்சன் 70 ரன்களை கடந்து ஆடிக்கொண்டிருந்தபோது இம்ரான் தாஹிர் வீசிய 38வது ஓவரில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. வில்லியம்சன் விக்கெட் முக்கியமானது என்பதை கருத்தில்கொண்டு ரிவியூ போனாலும் பரவாயில்லை என்று நம்பிக்கையுடன் ரிவியூவை எடுத்திருந்தால் வில்லியம்சன் அவுட்டாகியிருப்பார். அவரது விக்கெட்டுக்கு பின் பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால் தென்னாப்பிரிக்கா வெற்றியும் பெற்றிருக்கும். ஏனெனில் அது நல்ல அவுட். டுப்ளெசிஸ் ரிவியூ எடுக்கவில்லை. ரிப்ளேவில் தெளிவாக அது அவுட் என்பது தெரிந்தது. 

அதுபோன்ற முக்கியமான நேரத்தில் முக்கியமான வீரரின் விக்கெட் தேவையென்றால், சந்தேகத்துக்குரிய வகையிலும் மிகவும் க்ளோசாகவும் இருக்கும் ஒரு விக்கெட்டுக்காக ரிவியூவை பயன்படுத்த வேண்டும். அதற்காகத்தானே ரிவியூ இருக்கிறது. அதை பத்திரப்படுத்தி என்ன பயன்..?