விஜய் ஹசாரே ஃபைனல், சையத் முஷ்டாக் அலி ஃபைனல் ஆகிய இரண்டு ஃபைனல்களிலும் கர்நாடகாவிடம் தோற்று கோப்பையை இழந்த தமிழ்நாடு அணி, ரஞ்சி டிராபியிலாவது பதிலடி கொடுக்கும் முனைப்பில் இறங்கியது. ஆனால் ஜெயிக்க வாய்ப்பிருந்த இந்த போட்டியிலும் மோசமான பேட்டிங்கால் தோல்வியை தழுவியுள்ளது. 

கடந்த 9ம் தேதி தொடங்கி திண்டுக்கல்லில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணியின் தேவ்தத் படிக்கல், பவன் தேஷ்பாண்டே மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். மயன்க் அகர்வால் 43 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் கர்நாடக அணி 336 ரன்களை குவித்தது. 

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் நிலைத்து ஆடிய சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் சதமடித்து அசத்தினார். தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 81 ரன்களை சேர்த்தனர். முரளி விஜய் 32 ரன்களிலும் அபினவ் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாபா அபரஜித் 37 ரன்களும் கேப்டன் விஜய் சங்கர் 12 ரன்களும் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின்னர் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து, அவர்களையும் வழிநடத்தி, தானும் சிறப்பாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினார் தினேஷ் கார்த்திக். பொறுப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் சதமடித்து அணியை முன்னெடுத்து சென்றார். தினேஷ் கார்த்திக் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிய, கடைசி விக்கெட்டாக தினேஷ் கார்த்திக் 113 ரன்களில் ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 29 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கர்நாடக அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி நாளான நேற்றைய ஆட்டத்தின் முதல் செசனிலேயே எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் தமிழ்நாடு பவுலர்கள் வீழ்த்திவிட்டனர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 151 ரன்களுக்கு கர்நாடக அணி ஆல் அவுட்டானது. 

முதல் இன்னிங்ஸில் 29 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், மொத்தமாக 180 ரன்கள் முன்னிலை வகித்தது கர்நாடக அணி. 181 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்தும் முரளி விஜயும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடினர். ஆனால் உணவு இடைவேளைக்கு பின்னர் ஆட்டத்தின் போக்கு மாற தொடங்கியது. 

முதல் விக்கெட்டுக்கு முரளி விஜயும் அபினவ் முகுந்தும் இணைந்து 49 ரன்கள் சேர்த்தனர். முரளி விஜய் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பாபா அபரஜித் ரன்னே எடுக்காமலும் அஷ்வின் 2 ரன்களிலும் வரிசையாக நடையை கட்டினர். கர்நாடக அணியின் ஸ்பின் பவுலர் கிருஷ்ணப்பா கௌதம் மிக அபாரமாக வீசி தமிழ்நாடு அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அபினவ் முகுந்த் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மீண்டும் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த தினேஷ் கார்த்திக், இந்த முறை அந்த பணியை சரியாக செய்யவில்லை. தினேஷ் கார்த்திக்கை 17 ரன்களில் கிருஷ்ணப்பா கௌதம் வீழ்த்தினார். விஜய் சங்கர், ஜெகதீஷன் என யாருமே சரியாக ஆடவில்லை. 

114 ரன்களுக்கே தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முருகன் அஷ்வினும் மணிமாறன் சித்தார்த்தும் முடிந்தவரை போராடினர். ஆனாலும் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. முருகன் அஷ்வின் 23 ரன்களிலும் சித்தார்த் 20 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் கடைசி ஓவரில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷின் விக்கெட்டை வீழ்த்தினார் கிருஷ்ணப்பா கௌதம். அந்த ஓவரில் விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்தால் கூட போட்டி டிரா ஆகியிருக்கும். ஆனால் அதற்கு அனுமதிக்காத கௌதம், கடைசி ஓவரில் விக்கெட்டை வீழ்த்தி கர்நாடக அணிக்கு த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார். 

181 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணி, 154 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எளிய இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணி, மோசமான பேட்டிங்கின் விளைவாக தோல்வியை தழுவியது. கிருஷ்ணப்பா கௌதம் மிகவும் அபாரமாக பந்துவீசி, 8 விக்கெட்டுகளை வீழ்த்தி கர்நாடக அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். 

விஜய் ஹசாரே ஃபைனல், சையத் முஷ்டாக் அலி ஃபைனல் ஆகியவற்றை தொடர்ந்து ரஞ்சி டிராபியிலும் கர்நாடக அணியிடம் மண்ணை கவ்வியுள்ளது தமிழ்நாடு அணி.