உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரேவில் இன்றைய ஆட்டங்களில் பெரும்பாலானவை மழையால் ரத்தானது. ஆனால் கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டி முழுவதுமாக நடந்துமுடிந்தது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற ஜார்கண்ட் அணி,  கர்நாடக அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை குவித்தது. 

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர் சொதப்பலால், இந்திய டெஸ்ட் அணியில் இடத்தை இழந்த கேஎல் ராகுல், விஜய் ஹசாரேவில் நன்றாக ஆடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் இந்த போட்டியிலும் வழக்கம்போலவே சோபிக்கவில்லை. நல்ல ஸ்டார்ட் கிடைத்தும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டார். 51 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார் ராகுல்.

ஆனால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்த போட்டியில் அறிமுகமான மற்றொரு தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் பந்துகளை வீணடித்தாலும் அரைசதம் என்ற மார்க்கை கடந்தார். 83 பந்துகளில் 58 ரன்கள் அடித்த படிக்கல் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து ஆட்டமிழந்தார். 

மூன்றாம் வரிசையில் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். டாப் ஆர்டர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை வீணடிக்காமல், அதிரடியாக ஆடி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர் கேப்டன் மனீஷ் பாண்டேவும், பவன் தேஷ்பாண்டேவும். மனீஷ் பாண்டேவும் தேஷ்பாண்டேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த மனீஷ் பாண்டே 44 பந்துகளில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, தேஷ்பாண்டே தொடர்ந்து சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார். அதன்பின்னர் வந்த வீரர்களான கிருஷ்ணப்பா கௌதம், ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் ஏமாற்றமளிக்க, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்தது கர்நாடக அணி. 

286 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஜார்கண்ட் அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷானும் ஆனந்த் சிங்கும் களமிறங்கினர். கேப்டன் இஷான் கிஷான் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரரான ஆனந்த் சிங்கை 32 ரன்களில் கிருஷ்ணப்பா கௌதம் வீழ்த்தினார். 

விராட் சிங் 21 ரன்களில் ஆட்டமிழக்க, குமார் தியோப்ரத், இஷான் ஜக்கி ஆகிய இருவரையும் ஷ்ரேயாஸ் கோபால் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் சவுரவ் திவாரி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அனுகுல் ராயை 26 ரன்களில் வீழ்த்திய கிருஷ்ணப்பா கௌதம், சவுரவ் திவாரியை 43 ரன்களில் வீழ்த்தி ஜார்கண்ட் அணியின் நம்பிக்கையை தகர்த்தார். அதன்பின்னர் டெயிலெண்டர்களில் 2 விக்கெட்டை வீழ்த்தி, மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கிருஷ்ணப்பா கௌதம். கர்நாடக அணியின் ஸ்பின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் ஜார்கண்ட் அணி வெறும் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து கர்நாடக அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.