விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டியில் தமிழ்நாடும் கர்நாடகாவும் ஆடின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி, பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

தமிழ்நாடு அணியில் அபினவ் முகுந்த் மற்றும் பாபா அபரஜித் ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். அபினவ் 85 ரன்களையும் அபரஜித் 66 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர். அவர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. தமிழ்நாடு அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

253 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய கர்நாடக அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த மயன்க் அகர்வால், தமிழ்நாடு அணியின் பவுலிங்கை தாறுமாறாக அடித்து நொறுக்கினார். களமிறங்கியது முதலே அடித்து ஆடிய அவர் அரைசதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து நிதானமாக ஆடிய ராகுலும் அரைசதம் அடித்தார். 

கர்நாடக அணி 23 ஓவரில் 146 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை பெய்தது. மயன்க் அகர்வால் 69 ரன்களுடனும் ராகுல் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் விஜேடி முறைப்படி 60 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி வெற்றி பெற்றது. மழை நிற்காமல் பெய்துகொண்டே இருந்ததால் மழையோடு மழையாக டிராபி கர்நாடக அணியின் கேப்டன் மனீஷ் பாண்டேவிடம் வழங்கப்பட்டது. கர்நாடக வீரர்களும் வெற்றியை மழையில் நனைந்தபடியே கொண்டாடினர்.