விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன. தமிழ்நாடு அணி லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல், அபாரமாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கர்நாடக அணி லீக் சுற்றில் ஹைதராபாத்திடம் மட்டுமே தோல்வியடைந்தது. 

தமிழ்நாடு அணி குஜராத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சத்தீஸ்கர் அணியின் அமன்தீப் கரே மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 78 ரன்களை குவித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ஆடவில்லை. சொற்ப ரன்கள் மட்டுமே அடித்து பங்களிப்பு செய்தனர். அந்த அணி 49.4 ஓவரில் 223 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. 

224 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கர்நாடக அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் தேவ்தத் படிக்கல்லும் அபாரமாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 155 ரன்களை சேர்த்தனர். 92 ரன்களை குவித்த படிக்கல், 8 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ராகுலுடன் மயன்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடிய மயன்க் அகர்வால், அந்த தொடர் முடிந்துவிட்டதால், கர்நாடக அணியில் இணைந்தார். ராகுலுடன் ஜோடி சேர்ந்த மயன்க் அகர்வால், அதிரடியாக ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி விரைவாக ரன்களை சேர்த்தார். 33 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 40வது ஓவரிலேயே கர்நாடக அணி இலக்கை எட்ட உதவினார். ராகுல் 88 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

40வது ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்ற கர்நாடக அணி, இறுதி போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே செம ஃபார்மில் இருப்பதால் இறுதி போட்டி பயங்கர விறுவிறுப்பாக இருக்கும். இறுதி போட்டி, நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளது.