இந்திய கிரிக்கெட் அணிக்கு 1983ல் முதல் முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ். 1978 முதல் 1994 வரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிய கபில் தேவ், மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். 

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவனான கபில் தேவ், மாரடைப்பால் டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.

சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என்ற தங்களது விருப்பங்களையும் வேண்டுதல்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

மருத்துவமனை தரப்பில் கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே டுவிட்டரில், தன் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த கபில் தேவ், உங்களது அன்பால், விரைவில் குணமடைந்து வருவேன் என்று கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்தார்.