இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட்டின் மீது ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ளன. தோனியின் கெரியர் முடிந்துவிட்டதால், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டு வருகிறார். 
 
ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரிலேயே டெஸ்ட் அணியில் அறிமுகமாகிவிட்டார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணிலும் சதமடித்து, அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார். இதையடுத்து அவர்தான் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்ற சூழல் உருவான நிலையில், உலக கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். 

நெருக்கடியான சூழல், நெருக்கடியில்லாமல் நிதானமாக ஆடக்கூடிய சூழல் என அனைத்து சூழல்களிலும் சொதப்பி தனது பெயரை தானே கெடுத்துக்கொண்டார். அவரது தவறான ஷாட் செலக்‌ஷன் மற்றும் அவசரம் ஆகியவையே, அவர் விரைவில் விக்கெட்டை இழக்க காரணம். அவர் மீது அழுத்தம் கொடுக்காமல், அவருக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்தாலும், மறைமுகமாக அவர் மீது ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. அணி நிர்வாகமும் அந்த அழுத்தத்தை அவர் மீது திணித்துக்கொண்டே இருக்கிறது. 

ரிஷப் பண்ட்டின் தவறான ஷாட் செலக்‌ஷனை கண்டித்த தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் தொடர்ந்து இதுபோல் ஆடினால் முட்டிக்கு முட்டி தட்டிவிடுவேன் என்று பாசமாக கண்டித்தார். அந்த கண்டிப்பு மிகவும் கடுமையானது இல்லையென்றாலும், அது ஒருவிதமான அழுத்தத்தை ரிஷப் பண்ட்டிற்கு ஏற்படுத்துகிறது. அதேபோல பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும், ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற பேட்டிங்கை சாடியிருந்தார். இதுமாதிரியான விஷயங்களால், கவனமாக ஆட வேண்டும் என்ற எண்ணமே ரிஷப் பண்ட்டை அவரது இயல்பான ஆட்டத்தை ஆடவிடாமல் தடுத்துவிடுகிறது. 

அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை கையாளும் விதத்தை கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். ரிஷப் பண்ட்டின் கேரக்டரை தெரிந்துகொண்டு உளவியல் ரீதியாக அவரை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவரை வழிநடத்தினால்தான் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும் என அணி நிர்வாகத்துக்கு யுவராஜ் சிங் ஆலோசனை தெரிவித்திருந்தார். 

இவ்வாறு ஆளாளுக்கு ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவிப்பதே, அவருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திவரும் நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். 

ரிஷப் பண்ட் குறித்து பேசிய கபில் தேவ், பந்து தனது பேட்டில் இனிமையாக படும் அந்த தருணத்திற்காக ரிஷப் பண்ட் காத்திருக்க வேண்டும். அவருக்கு அவசரமே தேவையில்லை. அவரிடம் வயதும் உள்ளது, திறமையும் உள்ளது. எனவே பொறுமைதான் அவருக்கு முக்கியம். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே நூலிழை வித்தியாசம்தான். ஷாட் சரியாக கனெக்ட் ஆகிவிட்டால் ஹீரோ. ஷாட் தவறாகிவிட்டால், அதுவே எமனாகிவிடும், அவ்வளவுதான். ரிஷப் பண்ட் நினைக்கும்போதெல்லாம் பெரிய ஷாட் ஆடும் திறன் பெற்றவர். எனவே அவர் அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர வேண்டுமா அல்லது அணிக்காக சூழலுக்கு ஏற்ப ஆடவேண்டுமா என்பதை அவர் விரைவில் முடிவு செய்ய வேண்டும். 

ஆனால் அவரை நீக்குவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தி கொடுத்துவிடக்கூடாது. 1984ம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டேன். அதற்கான வாய்ப்பை நான் தான் ஏற்படுத்தி கொடுத்தேன். எனவே அதேபோல் ரிஷப் பண்ட்டும் தன்னை நீக்குவதற்கான வாய்ப்பை தானே ஏற்படுத்தி கொடுத்துவிடக்கூடாது என்று கபில் தேவ் கூறியுள்ளார்.