பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 297 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக அசார் அலி 93 ரன்கள் அடித்தார். கேப்டன் முகமது ரிஸ்வான் 61 ரன்கள் அடித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, 71 ரன்களுக்கு டாம் பிளண்டெல், டாம் லேதம் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் இழந்துவிட, அதன்பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சனும் ஹென்ரி நிகோல்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக ஆடினர். கேன் வில்லியம்சன் சதமடிக்க, அவரை தொடர்ந்து நிகோல்ஸும் சதமடித்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய வில்லியம்சன், இரட்டை சதமடித்தார். அண்மையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு இரட்டை சதமடித்த வில்லியம்சன், செம ஃபார்மில் இருக்கும் நிலையில், இந்த போட்டியிலும் இரட்டை சதமடித்தார். 4வது விக்கெட்டுக்கு வில்லியம்சனும் நிகோல்ஸும் இணைந்து 369 ரன்களை குவித்தனர். 71 ரன்னுக்கு 3வது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி, 369 ரன்னுக்குத்தான் 4வது விக்கெட்டை இழந்தது. 

ஹென்ரி நிகோல்ஸ் 157 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த ஒருசில ஓவர்களிலேயே 238 ரன்களுக்கு வில்லியம்சனும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த டேரைல் மிட்செல், வில்லியம்சனும் நிகோல்ஸும் விட்ட இடத்தில் இருந்து பேட்டிங்கை தொடர்ந்தார். மிட்செலும் சதமடிக்க, அவர் சதமடித்ததும், அவர் 102 ரன்களுக்கு களத்தில் இருந்த நிலையில், நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 659 ரன்கள் அடித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் டக் அவுட்டானார். பாகிஸ்தான் அணி 3ம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் அடித்திருந்தது. பாகிஸ்தான் அணி இன்னும்  354 ரன்கள் பின் தங்கியிருப்பதால், இந்த போட்டியில் தோல்வியடைவது உறுதியாகிவிட்டது; ஆனால் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்கிறதா இல்லையா என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.