நியூசிலாந்து பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியின் 3ம் வரிசை வீரர் அசார் அலி மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 93 ரன்கள் அடித்தார். ஆனால் சதத்தை வெறும் 7 ரன்களில் தவறவிட்டு 93  ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய கேப்டன் முகமது ரிஸ்வான் 61 ரன்கள் அடித்தார். ஃபஹீம் அஷ்ரஃப் 48 ரன்கள் அடித்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2ம் நாளான இன்றைய நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் பிளண்டல் 16 ரன்களுக்கும், டாம் லேதம் 33 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, சீனியர் வீரர் ரோஸ் டெய்லரும் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய இருவருமே மிகச்சிறப்பாக ஆடிவருகின்றனர். முதல் டெஸ்ட்டில் சதமடித்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்து, 2021ம் ஆண்டை நம்பர் 1 பேட்ஸ்மேனாக தொடங்கிய வில்லியம்சன், இந்த போட்டியிலும் சதமடித்தார். நிகோல்ஸும் சதத்தை நெருங்கிய நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிந்தது.

நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்துள்ளது. வில்லியம்சன் 112 ரன்களுடனும் நிகோல்ஸ் 89 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.