2010 ஆசிய கோப்பையின் போது கௌதம் கம்பீருடனான மோதல் குறித்து மௌனம் கலைத்துள்ளார் காம்ரான் அக்மல்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் வெறித்தனமாக விளையாடுவது மட்டுமல்லாது, களத்தில் கடுமையாக மோதியும் கொள்வார்கள்.
அப்படியான மோதல்களில் பெரும்பாலானவைகளில் கம்பீர் தான் இடம்பிடித்திருப்பார். கம்பீர் - அஃப்ரிடி மோதல், கம்பீர் - காம்ரான் அக்மல் மோதல் ஆகிய இரண்டும் மிகப்பிரபலம். கம்பீர் போட்ட இந்த 2 சண்டைகளுமே ஆசிய கோப்பை தொடரின்போதுதான்.
2007 ஆசிய கோப்பையில் ஷாஹித் அஃப்ரிடி - கம்பீர் இடையே சண்டை நடந்தது. அஃப்ரிடியின் சுயசரிதை வெளியானபோது, அந்த சண்டையை நினைவுகூர்ந்து இருவரும் மீண்டும் மோதிக்கொண்டனர்.
அதேபோல 2010 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் காம்ரான் அக்மலும், கம்பீரும் நேருக்கு நேராக முட்டிக்கொண்ட சண்டை, ஒரு ஆக்ஷன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லெவலுக்கு செமயாக இருக்கும்.
இந்நிலையில், அந்த சம்பவம் நடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அந்த சண்டை குறித்து பேசியுள்ளார் காம்ரான் அக்மல். இதுகுறித்து பேசியுள்ள காம்ரான் அக்மல், 2010 ஆசிய கோப்பையில் நானும் கம்பீரும் மோதிக்கொண்ட சம்பவம் முழுக்க முழுக்க தவறான புரிதலால் ஏற்பட்ட மோதல் தானே தவிர, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். கம்பீர் எனது சிறந்த நண்பர். நாங்கள் இருவரும் இணைந்து ”ஏ” அணிகளுக்காக நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறோம். இஷாந்த் சர்மாவுடனும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார் காம்ரான் அக்மல்.
இஷாந்த் சர்மாவுடன் 2012-2013ல் பெங்களூருவில் நடந்த ஒரு போட்டியின்போது, காம்ரான் அக்மல் இஷாந்த் சர்மாவுடன் சண்டை போட்டது குறிப்பிடத்தக்கது.
