ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-1 என தொடரை வென்றுவிட்ட நிலையில், சிட்னியில் ஜனவரி 3ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. 

சிட்னியில் நடக்கவுள்ள கடைசி டெஸ்ட் போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பயிற்சியின்போது, ஸ்டேடியத்தில் இருந்த 80 வயதான ஆஸ்திரேலிய அணியின் தீவிர ரசிகர் பில்லை சந்தித்தார் ஜஸ்டின் லாங்கர். அப்போது தான் அணிந்திருந்த டிரெய்னிங் தொப்பியை, அந்த 80 வயதான ரசிகருக்கு அணிவித்து அவரை மகிழ்வித்தார். ஜஸ்டின் லாங்கரின் செயலால் அந்த ரசிகர் நெகிழ்ச்சியடைந்தார். 

இதுகுறித்து பின்னர் பேசிய லாங்கர், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆஸ்திரேலிய ரசிகர்களின் முகத்தில் சிரிப்பை பார்க்க வேண்டும். சிறுவர்களோ அல்லது பில்லை போல 80 வயதான முதியவர்களோ.. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்களின் முகத்தில் சிரிப்பை பார்க்க வேண்டும். அதுதான் நமது பணியின் விளைவாக கிடைக்கும் பெருமை என்று லாங்கர் தெரிவித்தார்.