27 வயதான இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான டி காக், இளம் வயதிலேயே தனது அபாரமான ஆட்டத்திறமையால் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாகிவிட்டார்.

ஐபிஎல்லிலும் மும்பை அணிக்காக அபாரமாக ஆடி, அந்த அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், தான் தென்னாப்பிரிக்க கேப்டன் டி காக்கின் மிகப்பெரிய ரசிகன் என தெரிவித்துள்ளார்.

டி காக் குறித்து பேசிய பட்லர், தற்போதைய சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான வீரர்களில் டி காக்கும் ஒருவர். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்படக்கூடியவர். நான் அவரது மிகப்பெரிய ரசிகன். மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை. ஆட்டத்தின் மீதான அவரது பார்வை மற்றும் போட்டியை அவர் எடுத்துச்செல்லும் விதம் ஆகியவற்றை ரசித்து பார்ப்பேன் என்று பட்லர் தெரிவித்துள்ளார்.