உலக கோப்பை தொடரில் படுமோசமாக சொதப்பி தென்னாப்பிரிக்க அணி லீக் சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து அந்த அணி சொதப்பியதற்கு என்ன காரணம் என்று ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். 

2015 உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்த உலக கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறியது. முதல் போட்டியிலேயே இங்கிலாந்திடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவியது. 9 லீக் போட்டிகளில் ஆடி வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. 

தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டரில் டிவில்லியர்ஸ் இல்லாததன் விளைவு அப்பட்டமாக தெரிந்தது. டிவில்லியர்ஸின் இழப்பை அந்த அணியால் ஈடுகட்ட முடியவில்லை. நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஸ்டெய்னும் காயத்தால் ஒரு போட்டியில் கூட ஆடாமல் தொடரிலிருந்து விலகினார். இவற்றின் தாக்கம் அணியில் கடுமையாக இருந்தது. தொடர் முழுவதும் படுமோசமாக ஆடிய தென்னாப்பிரிக்க அணி, கடைசி லீக் போட்டியில் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. 

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதற்கு காரணம் தொடக்க வீரர்கள் மார்க்ரமும் டி காக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்ததுதான். இந்த போட்டிக்கு முந்தைய போட்டிகளில் எல்லாம் ஆம்லாவும் டி காக்குமே ஓபனிங் இறங்கினர். ஆம்லா ஃபார்மில் இல்லாததால் சரியாகவே ஆடவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்த தென்னாப்பிரிக்கா, கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் வெளியேறியது. 

இந்நிலையில், உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பிய தென்னாப்பிரிக்க அணி குறித்து பேசிய முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், அணியின் சிறந்த 11 வீரர்கள் யார், எந்தெந்த வீரர்களுடன் களமிறங்கப்போகிறோம் என்ற உறுதியோ திட்டமிடலோ இல்லாமல் உலக கோப்பை போன்ற பெரிய முக்கியமான தொடருக்கு சென்றால் இப்படித்தான் ஆகும் என்று நறுக்குனு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.