இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித்துக்கு பயிற்சியின்போது, தலையில் அடிபட்டதால், அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், 3ம் வரிசையில் ஆடினார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபின்ச்சும் வார்னரும் களத்திற்கு வந்தனர். ஆரம்பத்தில் நிதானமாக தொடங்கினார் வார்னர். வார்னர் களத்தில் நிலைத்துவிட்டால் தெறிக்கவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது எண்ணத்தை ஈடேற விடாத ஆர்ச்சர், நான்காவது ஓவரின் முதல் பந்தை 145 கிமீ வேகத்தில் நல்ல லைன்&லெந்த்தில் துல்லியமாக வீசினார். மிக துல்லியமாக வீசப்பட்ட அந்த பந்தை கண்டதுமே வார்னர் மிரண்டுவிட்டார் என்பதை கீழ்க்கண்ட வீடியோவில் பார்த்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 

ஆர்ச்சரின் அந்த பந்தை எப்படி எதிகொள்வதென்றே தெரியாமல் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் வார்னர். ஆர்ச்சரின் அந்த பந்து, ஆஃப் ஸ்டம்ப்பின் மேல் பகுதியை அழகாக தட்டிச்சென்றது. வார்னர் அதிர்ந்தே போனார்.

அதன்பின்னர் ஃபின்ச் 16 ரன்களிலும் ஸ்டோய்னிஸ் 43 ரன்களிலும் லபுஷேன் 21 ரன்களிலும் அலெக்ஸ் கேரி 10 ரன்களிலும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 23.4 ஓவரில் 123 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஆஸ்திரேலிய அணி. அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் மேக்ஸ்வெல்லும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திவருகின்றனர்.