ஒரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய அணி வெஸ்ட் இண்டீஸ். எதிரணிகள் வெஸ்ட் இண்டீஸை கண்டாலே மிரளும். கிளைவ் லாயிட் தலைமையில் 1975, 1979 ஆகிய இரண்டு உலக கோப்பைகளையும் தொடர்ச்சியாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 1983 உலக கோப்பையிலும் இறுதி போட்டி வரை சென்று, இந்தியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே மிரட்டலான அணியாக திகழ்ந்தது. தொடர்ச்சியாக 25 டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார அணி வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்தளவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணி தலைசிறந்த அணியாக இல்லை. இந்நிலையில், இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில், முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளது ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி. 

இங்கிலாந்து அணிக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. 40 புள்ளிகளை பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் புள்ளி கணக்கை தொடங்கியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றியை பெற்றுக்கொடுத்த நான்காவது கேப்டன் என்ற பெருமையை ஹோல்டர் பெற்றுள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி 10 வெற்றியை பெற்றுக்கொடுத்த லெஜண்ட் பேட்ஸ்மேன் பிரயன் லாரா தான் நான்காமிடத்தில் இருந்தார். ஹோல்டர் 32 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்து 10 வெற்றியை பெற்றுக்கொடுத்ததால், பிரயன் லாராவை முந்திவிட்டார். 

இந்த பட்டியலில், 36 வெற்றிகளுடன் கிளைவ் லாயிட் முதலிடத்திலும், 27 வெற்றிகளுடன் விவியன் ரிச்சர்ட்ஸ் இரண்டாமிடத்திலும், 11 வெற்றிகளுடன் ரிச்சி ரிச்சர்ட்சன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.