சிட்னியில் ஜனவரி 3ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. லபுஷேனின் அபாரமான இரட்டை சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை குவித்தது. லபுஷேன் 212 ரன்களை குவித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டத்தில் 29 ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்துள்ளது. தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டெல் ஆகிய இருவரும் மிகக்கவனமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்தனர். மூன்றாம் நாள் ஆட்டத்திலும் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடினால், நியூசிலாந்து அணி வலுப்பெறும். 

இந்த போட்டியில் பாட்டின்சன் பரிதாபமாக ஆட்டமிழந்தார். பல வித்தியாசமான முறைகளில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாவதை பார்த்திருக்கிறோம். அதில் சில அவுட்டுகள், அவுட்டான வீரரை பார்த்து ரசிகர்களே அய்யோ பாவம் என்று சொல்லும் வகையில் இருக்கும். அப்படித்தான் ஆஸ்திரேலிய வீரர் பாட்டின்சனும் இந்த போட்டியில் ஆட்டமிழந்திருக்கிறார். 

பாட்டின்சன் 2 ரன்னில் வாக்னரின் பந்தில் ஆட்டமிழந்தார். வாக்னர் வீசிய 143வது ஓவரின் 4வது பந்தில் பாட்டின்சன் அவுட்டானார். வாக்னர் வீசிய அந்த பந்தின் லெந்த்தையும் வேகத்தையும் தவறாக கணித்தார் பாட்டின்சன். அதனால் பந்து அவரிடம் வருவதற்குள்ளாகவே அதைவிடுவதற்கு தயாரானார். ஆனால் பந்து தாமதமாக வந்ததுடன், அவர் எதிர்பார்த்த லெந்த்தில் வராமல், சற்று கீழாக வந்ததால் அவரது கையில் பட்டு, பின்னர் பேட்டிங் பின் பக்கத்தில் பட்டும் ஸ்டம்பில் அடித்தது. பேட்டின் பின் பக்கத்தில் பட்டு, பந்து காற்றில் இருந்தபோது அதை ஸ்டம்பில் படாமல் தடுக்க முயன்றார் பாட்டின்சன். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து 2 ரன்னில் ஆட்டமிழந்து சென்றார் பாட்டின்சன். அந்த வீடியோ இதோ..