உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஜடேஜா சிறப்பாக பேட்டிங் ஆடியது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

உலக கோப்பைக்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. அனைத்து அணிகளும் பயிற்சி போட்டியில் ஆடிவருகின்றன. நேற்று நடந்த 2 போட்டிகளில் ஒன்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. 

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவருமே ட்ரெண்ட் போல்ட்டின் அடுத்தடுத்த ஓவர்களில் தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ராகுல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நிதானமாக ஆடிய ஹர்திக் பாண்டியா, பெரிய இன்னிங்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு 30 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தோனியும் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அதிகமான ஓவர்கள் களத்தில் நின்று ஆடி தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை ஜடேஜா சரியாக பயன்படுத்தி கொண்டார். அபாரமாக பேட்டிங் ஆடி 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்து ஜடேஜா ஆட்டமிழந்தார். ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங்கால் தான் இந்திய அணி 179 ரன்களையாவது சேர்த்தது. இல்லையென்றால் இதுவும் வந்திருக்காது. 

பவுலிங் ஆல்ரவுண்டராகவே அறியப்படும் ஜடேஜா, தனது பேட்டிங் திறமையையும் நிரூபித்தார். இந்த போட்டியில் 180 ரன்கள் என்ற இலக்கை எட்டி நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

போட்டிக்கு பின்னர் தனது பேட்டிங் குறித்து பேசிய ஜடேஜா, ஐபிஎல்லில் அதிகமாக பேட்டிங்கில் கவனம் செலுத்தி, சரியான ஷாட் செலக்‌ஷனுக்காக தீவிர பயிற்சி எடுத்தேன். தொடர்ந்து பேட்டிங்கில் ஜொலிப்பதற்காக பயிற்சி எடுத்துவருகிறேன். நான் களத்திற்கு வரும்போது நிறைய ஓவர்கள் மீதமிருந்தன. எனவே அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். தொடக்கத்தில் சில பந்துகளை மிகவும் கவனமாக எத்ரிகொண்டு ஆடினேன். நிதானமாக ஆடி களத்தில் நிலைத்ததால்தான் அதன்பின்னர் நன்றாக ஆடி ரன்களை சேர்க்க முடிந்தது என ஜடேஜா தெரிவித்தார்.