இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 274 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முயன்ற ஜடேஜாவின் போராட்டம் வீணானது. 

ஆக்லாந்தில் இன்று நடந்த போட்டியில் 274 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 153 ரன்களுக்கே, பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், ஷர்துல் தாகூர் ஆகிய 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனாலும் மன உறுதியையும் முயற்சியையும் சற்றும் தளரவிடாத ஜடேஜா, நவ்தீப் சைனியுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 

ஜடேஜா ஒருமுனையில் நிலையாக நின்று ஆடி போட்டியை டீப்பாக எடுத்துச்சென்றார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய சைனி, ஆரம்பத்தில் நிதானமாகவும் களத்தில் நிலைத்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். 44வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய சைனி, அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் விளாசினார். 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் நம்பிக்கையுடன் களத்தில் நின்று அரைசதம் அடித்த ஜடேஜா, கடைசி வரை போராடினார். ஆனால் சாஹலும் அவுட்டானதால், அழுத்தம் அதிகரித்தது. 49வது ஓவரில் ஜடேஜா 55 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Also Read - நியூசிலாந்தை மரண பீதியாக்கிய சைனியின் பேட்டிங்.. ஜடேஜாவின் கடும் போராட்டம் வீண்.. இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

இந்திய அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 2-0 என வென்றது. இந்த போட்டியில் ஜடேஜா அருமையாக ஆடி, அரைசதம் அடித்து கடைசி வரை போட்டியை டீப்பாக எடுத்துச்சென்றார். ஆனால் அவரது போராட்டம் வீணானது. 

7வது வரிசையில் பேட்டிங் ஆடி ஜடேஜா அடித்த 7வது அரைசதம் இது. இதன்மூலம் 7வது பேட்டிங் ஆர்டரில் இறங்கி அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ் மற்றும் தோனி ஆகிய இருவரும் 7வது பேட்டிங் ஆர்டரில் 6 அரைசதங்கள் அடித்துள்ளனர். அவர்கள் இருவரின் சாதனையையும் முறியடித்து ஜடேஜா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.