இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் 4 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றுள்ளதால் கடைசி போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கி ஆடிவருகின்றன. டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் கடைசி ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ஃபின்ச் - கவாஜா ஜோடி நிதானமாக தொடங்கி நல்ல தொடக்கத்தை அமைத்தனர். நிதானமாக ஆடிய ஃபின்ச்சை வேகப்பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. 15வது ஓவரை தனது முதல் ஓவராக வீசவந்த ஜடேஜா, அந்த ஓவரிலேயே ஃபின்ச்சை போல்டாக்கி அனுப்பினார். ஃபின்ச் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடி சேர்ந்தார். 

இந்த ஜோடி கடந்த போட்டியை போலவே பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடியது. ராஞ்சியில் நடந்த மூன்றாவது போட்டியில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை அடித்த கவாஜா, நான்காவது போட்டியில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி சதத்தை பூர்த்தி செய்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது சதமாகும். இரண்டு சதங்களையும் இந்தியாவுக்கு எதிராக, அதுவும் ஒரே தொடரில் அடித்துள்ளார். கடந்த போட்டியில் 9 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதில் சதமடித்திருந்தால், ஹாட்ரிக் சதமாகியிருக்கும். 

சதமடித்தாலும் அதை பெரிய இன்னிங்ஸாக கவாஜா மாற்றவில்லை. சதமடித்த மாத்திரத்தில் சரியாக 100 ரன்களிலேயே கவாஜாவை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை ஒரே ரன்னில் வீழ்த்தினார் ஜடேஜா. 

மேக்ஸ்வெல்லின் விக்கெட்டுக்கு பிறகு ஹேண்ட்ஸ்கம்புடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த ஹேண்ட்ஸ்கம்பை 52 ரன்களில் ஷமி வீழ்த்தினார். இதையடுத்து ஸ்டோய்ன்ஸுடன் ஆஷ்டன் டர்னர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டுக்கு பிறகு மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கம்ப் ஆகிய இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

38 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.