சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், கொரோனாவிற்கு மருந்து இல்லாததால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழியாக பார்க்கப்படுகிறது. அதனால் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பும்ரா வீசிய நோ பால் புகைப்படத்தை பகிர்ந்து, சமூக விலகலை கடைபிடிக்குமாறு பதிவிட்டிருந்தது. அதாவது கிரீஸை விட்டு பும்ரா, நகர்ந்து பந்துவீசியதை நக்கலாக சுட்டிக்காட்டி, அதேபோன்று சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தது. 

2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று இந்திய அணி கோப்பையை இழந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஃபகார் ஜமான், அபாரமாக ஆடி சதமடித்து பெரிய இன்னிங்ஸை ஆடினார். அந்த போட்டியில் ஃபகார் ஜமானை ஆரம்பத்தில் பும்ரா அவுட்டாக்கினார். ஆனால் அது நோ பாலாக அமைந்துவிட்டதால் களத்தில் நீடித்த ஃபகார் ஜமான் சதமடித்தார். அந்த நோ பாலை பகிர்ந்துதான் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி நக்கலடித்தது. 

அதைக்கண்ட இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், 2010 டெஸ்ட் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர் வீசிய மிகப்பெரிய நோ பாலின் புகைப்படத்தை பகிர்ந்து, வீட்டுக்கு உள்ளேயே பாதுகாப்பாக இருங்க.. இல்லைனா 5 வருஷம் சிறை என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.