இஷாந்த் சர்மா இந்திய அணியின் சீனியர் நட்சத்திர பவுலர். இந்திய அணிக்காக 97 டெஸ்ட், 80 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 297, 115 மற்றும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்ட இஷாந்த் சர்மா, டெஸ்ட் அணியின் நட்சத்திர பவுலராக, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

இந்நிலையில், தனது கெரியரில் நடந்த மோசமான சம்பவம் குறித்து கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் பேசியுள்ளார். 2013ல் மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில், ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கிய சம்பவம் குறித்து பேசியுள்ளார். 

அதுகுறித்து பேசிய இஷாந்த் சர்மா, 2013 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொஹாலி ஒருநாள் போட்டி தான் எனது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய போட்டி. ஜேம்ஸ் ஃபாக்னர் எனது ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசினார். ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது. எனது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டேனே என்ற உணர்வு மிகுந்த வலியை கொடுத்தது. 

இந்த சம்பவம் நடந்து, அடுத்த 2 வாரங்களுக்கு அழுதேன். 2 வாரங்களுக்கு யாரிடமும் பேசவில்லை. எதிலும் கலந்துகொள்ளவில்லை. தனியாகவே இருந்தேன்; நிறைய அழுதேன். எனது காதலிக்கு ஃபோன் செய்து குழந்தை போல அழுதேன். அந்த 3 வாரங்கள் சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை. அதன்பின்னர் தான் சரியானேன். அந்த சம்பவம் எனது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று இஷாந்த் சர்மா தெரிவித்தார். 

அந்த போட்டியில் 304 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 44 ரன்கள் தேவைப்பட்டது. எனவே கிட்டத்தட்ட வெற்றிக்கு பக்கத்தில் இருந்தது இந்திய அணி. அப்படியான சூழலில், அந்த ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கினார். ஜேம்ஸ் ஃபாக்னர், அந்த ஓவரில் 4 சிக்ஸர்கள் உட்பட 30 ரன்களை விளாசி, ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு இஷாந்த் சர்மாவின் அந்த ஒரு ஓவர் முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. அந்த சம்பவத்தை பற்றித்தான் இஷாந்த் சர்மா பேசியுள்ளார். அந்த போட்டியில் 29 பந்தில் 68 ரன்களை அடித்த ஜேம்ஸ் ஃபாக்னர் தான், இஷாந்த் சர்மாவை கதறலுக்கு காரணமானவர்.