2008 சிட்னி டெஸ்ட்டில் தனது தவறுகளால் தான் இந்திய அணி தோற்க நேரிட்டது என்று வருத்தம் தெரிவித்திருந்த அம்பயர் ஸ்டீவ் பக்னரின் கருத்து குறித்து இர்ஃபான் பதான் பேசியுள்ளார்.

2007-08ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, கும்ப்ளே தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அந்த தொடரில் நடுவர்களின் தவறான முடிவுகளால் இந்திய அணி தொடரை இழக்க நேரிட்டது. அந்த தொடர் முழுவதும் 14 தீர்ப்புகள் இந்திய அணிக்கு எதிராக நடுவர்களால் வழங்கப்பட்டது. அதில் சுமார் 10 தவறான தீர்ப்புகள் சைமன்ட்ஸுக்கு சாதமாக வழங்கப்பட்டவை. சைமண்ட்ஸுக்கு 10 முறை அவுட் வழங்கப்படவில்லை. 

இதில் கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டுமே 7 முறை கள அம்பயர்கள் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான முடிவுகளை எடுத்தனர். அதுதான் அந்த போட்டியின் முடிவில் இந்திய அணி தோற்பதற்கும் காரணமாக அமைந்தது. 

இந்நிலையில், அந்த போட்டி குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த அம்பயர் ஸ்டீவ் பக்னர், தான் எடுத்த தவறான முடிவுகளால் தான் இந்திய அணி தோற்க நேரிட்டது என வருத்தம் தெரிவித்தார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு அவுட் கொடுக்காதது மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு தவறாக அவுட் கொடுத்தது ஆகிய தனது தவறான 2 முடிவுகளால் தான் இந்திய அணி தோற்றது என்று வருத்தம் தெரிவித்திருந்தார். 

அந்த குறிப்பிட்ட சிட்னி டெஸ்ட்டில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 30 ரன்களில் இஷாந்த் சர்மாவின் பந்தில் அவுட். ஆனால் அதற்கு ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுக்கவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சைமண்ட்ஸ், அந்த இன்னிங்ஸில் 162 ரன்களை குவித்தார். 30 ரன்களில் அவுட்டாகியிருக்க வேண்டிய சைமண்ட்ஸிற்கு அவுட் கொடுக்காததால் அவர் 162 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 463 ரன்களை குவித்தது. அதற்கு முக்கிய காரணம், சைமண்ட்ஸ் தான். 

அதேபோல, ராகுல் டிராவிட்டுக்கு தவறாக அவுட் கொடுத்தார் ஸ்டீவ் பக்னர். கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி இலக்கை விரட்டியபோது, 103 பந்துகள் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் டிராவிட்டுக்கு தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டார். இதையடுத்து 210 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி, 122 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் தோற்றது. ராகுல் டிராவிட்டிற்கு ஸ்டீவ் பக்னர் தவறுதலாக அவுட் கொடுக்கவில்லையென்றால், போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும்.

இந்த 2 தவறான முடிவுகளுக்காகத்தான் வருத்தம் தெரிவித்தார் ஸ்டீவ் பக்னர். இந்நிலையில், இப்போது வருத்தம் தெரிவித்து என்ன பிரயோஜனம் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், தவறுகளை ஏற்றுக்கொள்வதால் என்ன பிரயோஜனம்? முடிந்தது முடிந்தது தான்.. நாங்கள் அந்த போட்டியில் தோற்றுவிட்டோம். அதுதான் மிஞ்சுகிறது. 

அம்பயர்களின் தவறான முடிவுகளால் தான் அந்த போட்டியில் தோற்றோம். இப்போது அம்பயர்கள் வருந்துவதால் எதுவும் மாறப்போவதில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக, பேட்டிங்கின்போதோ, பவுலிங்கின்போதோ, தவறான முடிவுகளை எல்லாம் கடந்துதான் சென்றாக வேண்டும். அப்போதெல்லாம் விரக்தியாக இருக்கும். ஒருமுறை தவறான முடிவை கொடுத்தால் பரவாயில்லை. அந்த போட்டியில் 7 முறை தவறான அம்பயரிங்கால், நாங்கள் அந்த போட்டியில் தோற்றே விட்டோம். சைமண்ட்ஸுக்கு மட்டுமே 3 முறை அவுட் கொடுக்கப்படவில்லை. சைமண்ட்ஸுக்கு சரியாக அவுட் கொடுத்திருந்தால், நாங்கள் ஜெயித்திருப்போம்.

அம்பயர் தவறு செய்யும்போது பொதுவாக விரக்தியும் ஏமாற்றமுமாக இருக்கும். ஆனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் இந்திய வீரர்கள் கோபமே அடைந்துவிட்டார்கள். அதற்கு முன் இந்திய வீரர்கள் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. அம்பயர்கள் வேண்டுமென்றே ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள் என்றே ரசிகர்கள் கருதினார்கள். கிரிக்கெட் வீரர்கள் அப்படி யோசிக்க முடியாது. ஓகே என்று நாங்கள் கடந்துதான் போயாக வேண்டும். ஆனால் ஒரே போட்டியில் 7 தவறுகள் என்பதெல்லாம் ரொம்ப மோசம். இந்திய அணிக்கு இழைக்கப்பட்ட அநீதி அது என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.